மாமல்லபுரம் வந்து சேர்ந்த செஸ் ஒலிம்பியாட் தீபம்.. உற்சாக வரவேற்பு
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தீபம் மாமல்லபுரத்தை வந்தடைந்தது.44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டிக்கான தீப ஓட்டத்தைக் கடந்த 19ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தாா்.
தொடர்ந்து தமிழகத்தின் 75 நகரங்களுக்குச் சென்ற ஒலிம்பியாட் தீபம் நேற்று முன்தினம் கோவை வந்தது. பின்னர் மதுரை, கன்னியாகுமரி என பல்வேறு நகரங்களுக்கு சென்ற தீபம் இன்று காலை மாமல்லபுரத்தை வந்தடைந்தது. இதனை அமைச்சர்கள் மெய்யநாதன், அன்பரசன் ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது, மாணவ மாணவிகள் பங்கேற்ற ஓயிலாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இருசக்கர வாகனம் மற்றும் ஜீப் பேரணியும் நடந்தது.
பின்னர் செண்டை மேளம் முழங்கக் கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து கடற்கரை கோயில் வரையில் ஜோதி அணிவகுப்பு நடைபெற்றது. இதனிடையே சென்னை வந்தடைந்த ஜோதியை மாநிலக் கல்லூரியில் இருந்து செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஏந்திச் சென்றார். அதை போட்டி நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கிற்கு வாகனத்தில் கொண்டு சென்று ஒப்படைப்பார்.
மாமல்லபுரத்தில் சுகாதாரத்துறை சார்பில் 30 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என ஆயிரம் பேர் பணியில் ஈடுபடவுள்ளனர்.
வீரர், வீராங்கனைகள் தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை பரிசோதனை செய்ய, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வீரர் வீராங்கனைகளுக்கு தினமும் யோகா பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.