பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்? – சண் தவராஜா
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் (தலைமை அமைச்சர்) யார் என்பதைத் தெரிவு செய்யும் செயன்முறை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
தற்போது ஆட்சியில் உள்ள பழமைவாதக் கட்சியின் சார்பில் தலைமை அமைச்சராகப் பதவி வகித்த போரிஸ் ஜோன்சன் பல்வேறு முறைகேடுகள் காரணமாகப் பதவி விலக நேரிட்டதால் உருவான வெற்றிடத்தை நிரப்புவதற்கு அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான செயன்முறையின் இறுதி அங்கமாக இருவர் போட்டியில் உள்ளனர். நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 350 பழமைவாதக் கட்சி உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சரான லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரில் ஒருவர் பெரும்பாலும் செப்டெம்பர் 5ஆம் திகதி தலைமை அமைச்சராகப் பதவியேற்பார். ரிஷி சுனக்கைப் பொறுத்தவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலான வாக்களிப்பில் அவர் தொடர்ந்தும் முன்னிலை வகித்து வந்ததைப் பார்க்க முடிந்தது. எனினும், லிஸ் ட்ரஸ் தொடர்ந்தும் மூன்றாம் இடத்தில் இருந்துவந்த நிலையில் இறுதிச் சுற்றில் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டார். இறுதிச் சுற்றில் ரிஷி சுனக் 137 உறுப்பினர்களின் ஆதரவையும், லிஸ் ட்ரஸ் 113 உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் தற்போது சற்றொப்ப 160,000 வரையான கட்சி உறுப்பினர்களின் வாக்குகளே இவர்களில் யார் அடுத்த தலைமை அமைச்சர் என்பதைத் தீர்மானிக்க உள்ளன. இந்த அங்கத்தவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான பரப்புரையில் இரண்டு போட்டியாளர்களும் தங்கள் முழுப் பலத்தையும் அடுத்துவரும் வாரங்களில் செலவிட உள்ளனர். இது தொடர்பில் ஆதரவு திரட்டும் 12 சந்திப்புகளை சிறப்பு உறுப்பினர்களுடன் அவர்கள் மேற்கொள்ள உள்ளனர். முதலாவது சந்திப்பு எதிர்வரும் யூலை 28ஆம் திகதி லீட்ஸ் நகரில் நடைபெறும். இந்த வரிசையிலான இறுதிச் சந்திப்பு ஆகஸ்ட் 31ஆம் திகதி லண்டனில் நடைபெறும். அதேவேளை, இருவரும் இரண்டு தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கெடுக்க உள்ளனர். நாளை 25ஆம் திகதி பி.பி.சி.யிலும் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஸ்கை நியூசிலும் விவாதங்கள் நடைபெறும்.
இதேசமயம், பழமைவாதக் கட்சியின் சிறப்பு அங்கத்தவர்களின் வாக்களிப்பு ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் தொடக்கம் வரை நடைபெறும். செப்டெம்பர் 5இல் இறுதி முடிவு வெளியாகும்.
தற்போதைய நிலையில் யார் வெற்றி பெறுவார் என்பதைத் தெளிவாகக் கணித்துவிட முடியாத சூழலே உள்ளது. ஆனால், ஊடகங்களில் வழங்கப்படும் அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை வைத்துப் பார்க்கும் போது லிஸ் ட்ரஸ் வெற்றிபெறும் வாய்ப்பே அதிகமாக உள்ளது போன்று தெரிகின்றது. இதனை வேறு விதமாகக் கூறுவதானால், லிஸ் ட்ரஸ் வெற்றி பெறுவதையே பெரு முதலாளிகள் விரும்புகின்றார்கள் என்பது புரிகின்றது.
இறுதிவரை முன்னேறியுள்ள வேட்பாளர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு மிக்கவராக ரிஷி சுனக் அவர்களே உள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நடைபெற்ற அனைத்துச் சுற்றுக்களிலும் அவரே முன்னிலை வகித்து அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் அவர். ஆனால், இறுதி முடிவை எடுக்கவிருக்கும் கட்சியின் சிறப்பு அங்கத்தவர்கள் மத்தியில் அவருக்கு அவ்வளவாகச் செல்வாக்கு இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரது வெளிநாட்டுப் பின்னணியும் அவரது தரப்பில் ஒரு பின்னடைவான அம்சமாக அமையக் கூடும்.
லிஸ் ட்ரஸ் அவர்களைப் பொறுத்தவரை அவரது முன்னாள் கட்சித் தொடர்புகளே அவருக்குப் பாதகமாக அமையலாம். தற்போது பழமைவாதக் கட்சியின் அங்கத்தவராக அவர் விளங்கினாலும் முன்னர் அவர் லிபரல் ஜனநாயகக் கட்சியில் அங்கத்துவம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, லிபரல் ஜனநாயகக் கட்சியில் அவர் அங்கம் வகித்த காலப்பகுதியில் மன்னராட்சிக்கு எதிராக அவர் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக உலா வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இரண்டு வேட்பாளர்களும் – தற்போது சரிந்து கிடக்கும் – பிரித்தானியாவின் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்தும் கடப்பாடு தமக்கு இருப்பதாகவே பகிரங்கப்படுத்தி உள்ளனர். அதனை அடைவதற்காக சாதாரண மக்களின் வயிற்றில் அடிப்பதற்கான திட்டங்களையே கைவசம் வைத்தும் உள்ளனர். அதேவேளை, செல்வந்தர்கள் விடயத்தில் வரிக் குறைப்பு செய்வதற்கான ஆர்வத்தையும் கொண்டுள்ளனர்.
பரப்புரைகளின் போது சுவாரஸ்யமான ஒரு விடயத்தை அவதானிக்க முடிகின்றது. இரண்டு வேட்பாளர்களுமே ஒருவரை ஒருவர் சோசலிசவாதி எனக் குற்றஞ்சாட்டும் பாணியில் கூறி வருகின்றனர். தான் சோசலிசவாதி இல்லை என்பதை வன்மையாக மறுப்பதிலே இருவரும் அதீத ஈடுபாடு காட்டுவதையும் அவதானிக்க முடிகின்றது. சோசலிசவாதி என அழைக்கப்படுவதை கெட்ட வார்த்தையால் திட்டுவது போன்று புரிந்து கொள்ளும் இவர்களிடமிருந்து சாதாரண மக்களுக்கு நன்மையான திட்டங்கள் கிட்டும் என எதிர்பார்ப்பது எத்துணை மடமை?
கொரோனாப் பெருந் தொற்றின் தாக்கத்தினாலும், உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றத்தினாலும் சாதாரண மக்களும், மத்தியதர வர்க்கத்தினரும் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக வேலைநிறுத்தப் போராட்டங்களும், தொழிற்சங்க நடவடிக்கைகளும் பிரித்தானியாவில் அன்றாட நிகழ்வுகளாக மாறியுள்ளன. இந்நிலையில் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் எந்தவொரு திட்டமும் இருவரிடமும் இல்லாத நிலையே உள்ளது. மாறாக, உக்ரைன் போருக்கு அதிக முக்கியத்துவம் தர இருவருமே தயாராக உள்ளனர். அதிலும், லிஸ் ட்ரஸ் இது விடயத்தில் ரிஷி சுனக்கை விடவும் பல காத தூரம் முன்னணியில் உள்ளார்.
உக்ரைன் போர் ஆரம்பமான நாள் முதலாக லிஸ் ட்ரஸ் காட்டிவரும் அதீத ஈடுபாடு இரகசியமான விடயமல்ல. ரஸ்யா தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற தனது ஆசையைப் பகிரங்கமாகவே தெரிவித்த அவர், பிரித்தானியப் பிரஜைகள் உக்ரைன் சென்று கூலிப் படையினராகப் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தார்.
பிரித்தானிய ஆயுதப் படைகளின் தலைமையதிகாரி அண்மையில் விடுத்திருந்த ஒரு அறிக்கை இந்த வேளையில் நினைவு கூரத்தக்கது. பழமைவாதக் கட்சியின் சார்பில் யாரொருவர் தலைமை அமைச்சராக வந்தாலும் உக்ரைன் போர் முக்கியம் என்பதை மறந்துவிடக் கூடாது என அவர் தெரிவித்திருந்தார். இதனை வேறு விதமாகப் புரிந்து கொள்வதானால் உக்ரைன் போரை மேலும் கூர்மைப்படுத்தக் கூடிய ஒருவரே தலைமை அமைச்சராக வரவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார் எனலாம். போர் ஒன்று நடைபெறும் வேளையில் அதனால் இலாபமடையும் ஆயுத வியாபாரிகள் போர் விரைவில் முடிவடைவதை விரும்ப மாட்டார்கள் என்பது சாதாரணமாகப் புரிந்துகொள்ளக் கூடியதே. எனவே, – இடைப்பட்ட காலத்தில் திடீர் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாது போனால் – போரை ஊக்குவித்துவரும் லிஸ் ட்ரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது எனலாம்.
இதில் முரண்நகையான விடயம் என்னவெனில் தற்போதைய தலைமை அமைச்சர் போரிஸ் ஜோன்சன் பதவி விலகக் காரணமாக அமைந்த ஒருவர் ரிஷி சுனக். ஜோன்சனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தனது பதவியைத் துறந்து, ஏனையோரும் பதவிகளைத் துறக்க வழி சமைத்தவர். அந்த வகையில் தார்மீக அடிப்படையில் தலைமை அமைச்சர் பதவியை வகிக்கத் தகுதியானவர். ஆனால், லிஸ் ட்ரஸைப் பொறுத்தவரை அவர் இன்றுவரை பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பவர். ஜோன்சனின் முறைகேடுகள் தொடர்பில் அலட்டிக் கொள்ளாதவர். ஊழலைப் பற்றி, பதவித் துஸ்பிரயோகம் பற்றிக் கவலை கொள்ளாத ஒருவரையே பதவி நாடிச் செல்கிறது என்பது முதலாளித்துவ நடைமுறையில் உள்ள அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டப் போதுமானது. அரசியலில் இது சாதாரணமப்பா என்ற நடிகர் வடிவேலின் வசனத்தையே இது நினைவூட்டுகிறது.