சக எம்.பிக்களே கூட்டமைப்பை மலினப்படுத்துவதா! – சித்தார்த்தன் சீற்றம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக நாடாளுமன்ற உறுப்பினர்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மலினப்படுத்துவதை ஏற்க முடியாது என்று புளொட்டின் தலைவரும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“ஆறு, ஏழு கோடி ரூபா பெறுமதியான பணத்தை நான் பெற்றேன் எனச் சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல்கள் பரப்படுகின்றன. ஆனால், பணத்துக்கு நானோ எனது குடும்பமோ ஆசைப்பட்டவர்கள் அல்லர். கட்சி எடுத்த முடிவுக்கு மாறாகவும் நான் வாக்களிக்கவில்லை.
தேசிய கல்வியில் கல்லூரியின் காணி தற்போதைய மதிப்பு 60 கோடி ரூபா வரை வரும். அதனை நன்கொடையாக வழங்கிய எனக்குப் பணம் பெரிதல்ல. பணத்துக்காகச் செயற்படுவதில் எனக்கோ எனது குடும்பத்துக்கோ உடன்பாடில்லை.
கடந்த காலத்திலும் கூட்டமைப்புத் தலைமைக்கு கோடிக்கணக்கான ரூபா பணம் வழங்கப்பட்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டன. இவ்வாறான கதைகள் வரக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மலினப்படுத்துவதே ஆகும். இதனைச் சக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே செய்வதை ஏற்கமுடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் எப்போதும் நான் யாரிடமும் பணம் பெற்றவன் கிடையாது.
இவ்வாறான கதைகளைக் கூறுவதன் மூலம் எங்களை விடக் கூடுதலான விருப்பு வாக்கைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கருதுவது தவறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்குகள் இல்லாது போகும். இன்று மிகப் பலம் பொருந்திய கட்சியாகக் காணப்படுகின்ற இந்தக் கட்சியை உடைப்பது நிச்சயமாக தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் அனைத்தையும் உடைப்பதாகவே அமையும். இது சிங்கள தேசியத்துக்கும் பேரினவாதிகளுக்கும் உதவி செய்வதாகவே நான் பார்க்கின்றேன்.
நிச்சயமாக என்னைப் பொறுத்தவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எப்போதும் எவரிடமோ பணம் பெற்று நான் வேலை செய்தவன் அல்லன். மாறாக ஒரு நன்மை செய்யப் போகின்றேன் என்று பணம் வாங்கியவனும் அல்லன். நான் என்னைப் பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. மக்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்.
எங்களுடைய கடந்த காலங்களைப் பார்க்கின்றபோது யாழ்ப்பாணத்தில் அனைவருக்கும் தெரியும் – நாங்கள் எப்படிச் செயற்பட்டு இருக்கின்றோம் என்று. ஆகவே, நான் சொல்லத் தேவையில்லை. ஆனால், இவ்வாறான வதந்திகள் வருகின்றபோது நான் அதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கின்றது” – என்றார்.