என்.டி. ராமராவ் மகள் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன?
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆந்திராவில் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராகவும் இருந்தவர் என்.டி.ஆர் எனப்படும் என்.டி.ராமாராவ். என்.டி.ஆருக்கு 12 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் இளையவரான உமா மகேஸ்வரிதனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரமாக படுக்கை அறையில் இருந்து உமா மகேஸ்வரி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்த அவரது சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீண்ட கால வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்த அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் மற்றும் உறவினர்கள் மகேஸ்வரியின் இல்லத்திற்கு விரைந்தனர்.
உயிரிழந்த உமா மகேஸ்வரி, சந்திரபாபு நாயுடுவின் மனைவி, நாரா புவனேஸ்வரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டக்குபதி புரந்தேஸ்வரி ஆகியோரின் சகோதரி ஆவார். என்.டி.ராமாராவுக்கு எட்டு மகன்களும் நான்கு மகள்களும் இருந்தனர். நான்கு மகள்களில் மகேஸ்வரி இளையவர் ஆவார். ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மிகவும் புகழ்பெற்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.