ஜோசப் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடன் விடுதலை செய்க! – அரசிடம் ரிஷாத் வலியுறுத்து.
கைதுசெய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அரசை அறிக்கை ஒன்றின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கைதைத் தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், ஜனநாயக அடக்குமுறைகளில் இருந்து விடுபடுவதன் ஊடாக மட்டுமே நாட்டின் இன்றைய அவல நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் எனவும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதன் மூலமே சர்வதேச நாடுகளினதும், சர்வதேச அமைப்புக்களினதும் ஒத்துழைப்பையும் உதவிகளையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அநியாயமாகக் கைதுசெய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடன் விடுதலை செய்யுமாறு கோருவதாகவும் அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.