கோவிட் பாதிப்பு நிலவரம் – ஜூலை மாதம் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரிப்பு
இந்தியாவில் புதிதாக 19,406 பேருக்கு கோவிட் பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, நாட்டில் தற்போது 1,34,793 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 19,928 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாட்டின் மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 4.41,26,994 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 49 உயிரிழப்புகள் பதிவாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,26,649ஆக உள்ளது. நாட்டில் சராசரியாக தினசரி 20,000-ஐ ஒட்டியே தொற்று பதிவாகி வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த எண்ணிக்கையில் பெரிதாக ஏற்ற இறக்கங்கள் இல்லை.
அதேவேளை, மார்ச் முதல் ஜூன் முதலான காலகட்டத்தை ஒப்பிடும் போது ஜூலை மாதத்தில் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் நாட்டில் புதிதாக 5.67 லட்சம் பாதிப்புகளும், 1,241 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இந்த எண்ணிக்கை மே மற்றும் ஜூன் ஆகிய இரு மாதங்களின் மொத்த எண்ணிக்கைக்கு சமமாக உள்ளது. அதேபோல், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒரு மாத பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 5.67 லட்சமாக அதிகரித்துள்ளது.
பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதை ஊக்குவிக்கும் விதமாக 75 நாள்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம் செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், நேற்று மட்டும் 32,73,551 பேர் கோவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை மொத்தம் சுமார் 205.92 கோடி தடுப்பூசி டோஸ்கள் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளன.