ஜனாதிபதி ரணிலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வாழ்த்து!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்குச் சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர், ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை ஐ.நா பொதுச்செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளதோடு, அவ்வாறு செய்யும்போது பொதுமக்களுடன் கலந்தாலோசித்தல், சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல் உட்பட அனைத்துத் தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடலை ஊக்குவிப்பதன் முக்கியத்துவமும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பெண்களின் அரசியல் பங்கேற்புக்கான இலங்கையின் முயற்சிகளை அங்கீகரிப்பதிலும், முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
EOSG-2022-05525_ SG Congratulatory Letter to President of Sri Lanka_SIGNED
ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.