சாதி கலவரம்? 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கம்
மணிப்பூர் மாநிலத்தில் பதற்றமான சூழலைத் தவிர்க்கும் நோக்கத்தில் அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பிஷ்னுபூர் பகுதியில் வேன் ஒன்றுக்கு தீ வைத்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு தீ வைத்த விவகாரம் சாதிக் கலவரமாக மாறியதால், மேலும் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில கூடுதல் தலைமை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெறுப்புணர்வை பரப்பும் வகையிலான செய்திகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பப்படுகிறது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் நேற்று மாலை வேன் தீ வைக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிஷ்னுபூர் மாவட்டத்தில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.