‘2 லட்சம் பேரிடம் ரூ.13,000 கோடி மோசடி… நிதி நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாற வேண்டாம்’ – போலீசார் எச்சரிக்கை
நிதி நிறுவனங்களில் பணம் கட்டி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கி வரும் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, LNS இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் , IFS நிதி நிறுவனம் மோசடி, ELFIN E-COM பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவன மோசடிகள் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி ஜெயச்சந்திரன், மோசடி நிதி நிறுவனங்கள் பொது மக்களிடம் 10%லிருந்து 25% வரை வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறினார். பொதுமக்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக முகவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து பல்வேறு ஊர்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் ஆசை வார்த்தை கூறி பொதுமக்களுக்கு வலை விரித்து மோசடி அரங்கேற்றி வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த வகை நிறுவனங்களுக்கு எந்த ஒரு முதலீட்டு திட்டமும் இல்லை, நிறுவனங்களில் முதலில் முதலீடு செய்பவர்களின் பணத்தை பயன்படுத்தி அவர்களுக்கே வட்டியைக் கொடுத்து வருகின்றனர். மேலும், அடுத்தடுத்து முதலீடு செய்யும் பொது மக்களுக்கு அதே போன்று பணத்தை கொடுத்து பின்பு மொத்தமாக மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த வகை மோசடிகளுக்கு “பான்சி ஸ்கீம் (PONZI Scheme) என்று பெயர் என அவர் தெரிவித்தார்.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவனம், LNS international Finance Service (IFS) நிதி நிறுவனம், திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த Elpin-e-com private limited ஆகிய நிதி நிறுவனங்கள் மீது நாளுக்கு நாள் புகார்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த அவர், இதுவரை ஆருத்ரா நிதி நிறுவனம் 98,000 பேரிடம் ரூ.2124 கோடியே 98 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல ELFIN E-COM பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 7,000 பொதுமக்களிடம் ரூ.5000 கோடி மோசடி செய்துள்ளதாகவும், IFS நிறுவனம் 80,000 மக்களிடம் 6,000 கோடி மோசடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார். IFS நிறுவனத்தில் ரூ.4200 கோடியாக இருந்த மோசடி தொகையானது தற்போது 6000 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், அதே போல ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மற்றும் எல்பின் இ காம் பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களின் மோசடி தொகைகள் உயர்ந்து வருவதாகவும், புகார்தாரர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த மோசடி தொகை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆருத்ரா நிதி நிறுவனத்தில் இதுவரை 85 கோடி முடக்கப்பட்டதாகவும் ரூ.150 கோடிகள் மதிப்புள்ள சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் ரூபாய் 27 கோடி முடக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் இதுவரை இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ELFIN E-COM பிரைவேட் லிமிடெட் நிதி நிறுவனத்தில் 18 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் தற்போது வரை யாரும் கைது கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த எஸ்பி ஜெயக்குமார் அந்நிறுவனத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதேபோன்று ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ஆறு நபர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், எல்பின் ஈ காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஒரு நபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், IFS நிறுவனத்தில் நான்கு நபர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
eowtn07of2022@gmail.com என்ற மெயில் வழியாக புகார் தாரர்கள் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்த அவர் இது போன்ற நிதி நிறுவனங்களில் பணம் கட்டி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும் இது போன்ற நிதி நிறுவனங்கள் பொதுமக்களை ஏமாற்றுவதற்காகவே உருவாகி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு மோசடி ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.