90 நாட்கள் தாய்லாந்தில் தங்கிவிட்டு இலங்கைக்குத் திரும்புவார் கோட்டா.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிவடைந்தவுடன் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, தான் இன்னமும் சிங்கப்பூரிலேயே தங்கியிருக்கின்றார் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், தான் தாய்லாந்துக்குச் செல்ல எதிர்பார்த்திருக்கின்றார் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை பிரத்தியேகமாகத் தொடர்பு கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கோட்டாபய, வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடுவதற்காகத் தாய்லாந்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்பார் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
“இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இது தற்காலிக தங்குமிடம் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். எந்த அரசியல் நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. மேலும் இது அவருக்குத் தஞ்சம் புகுவதற்கு ஒரு நாட்டைக் கண்டறிய உதவும்” என்றும் தாய்லாந்து பிரதமர் கூறியுள்ளார்.
முன்னதாக கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்து செல்லவுள்ளார் என்று ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இன்னும் இராஜதந்திரக் கடவுச்சீட்டு வைத்திருப்பதால் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் கூறியிருந்தார்.
இந்த விஜயத்தை இலங்கை அரசு எதிர்க்கவில்லை எனவும், தாய்லாந்து அரசு அவருக்குத் தங்கும் வசதிகளைச் செய்து கொடுக்காது எனவும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தாய்லாந்துக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது என்பதே கோட்டாபய தங்குவதற்கான ஒரு நிபந்தனை என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.