அடைக்கலம் தேடி அலையும் கோட்டா :மனைவியுடன் இன்று தாய்லாந்தில் (Video & Photos)
இலங்கையில் மக்களின் மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டத்தால் நாட்டைவிட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று தனது மனைவியுடன் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தைச் சென்றடைந்தார்.
சிங்கப்பூரில் இருந்து இன்று மாலை கோட்டாபய ராஜபக்ச வெளியேறுவதை அந்நாட்டு குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இன்று மாலை சிங்கப்பூரின் செலிடார் விமான நிலையத்திலிருந்து வாடகை விமானம் மூலம் தாய்லாந்து நோக்கிப் பயணித்த கோட்டாபய, அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணியளவில் தலைநகர் பேங்கொக்கின் டான் முயாங் விமான நிலையத்தை வந்தடைந்தார் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தலைதூக்கியதையடுத்து கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதையடுத்து கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
ஆபத்து நிலைமையை உணர்ந்த கோட்டாபய, ஜூலை 13 ஆம் திகதி இலங்கையிலிருந்து விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் தனது மனைவியுடன் மாலைதீவுக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து மறுநாள் 14ஆம் திகதி சிங்கப்பூரைச் சென்றடைந்த அவர், ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்தார்.
சிங்கப்பூரில் கோட்டாபயவின் குறுகிய கால விசா அனுமதி இன்று (ஆகஸ்ட் 11) காலாவதியாக இருந்தது. ஜூலை 14 ஆம் திகதி அவர் சிங்கப்பூர் சென்றிருந்தபோது முதலில் 14 நாள் விசா அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அது ஆகஸ்ட் 11 ஆம் திகதி (இன்று) வரை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்பவே கோட்டாபய திட்டமிட்டிருந்தார். எனினும், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில்கொண்டு இலங்கைப் பயணத்தை அவர் பிற்போட்டார். இதற்கமைய அவர் இன்று தாய்லாந்தைச் சென்றடைந்தார்.
இலங்கை – தாய்லாந்து அரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம், இராஜதந்திரக் கடவூச்சீட்டை வைத்திருக்கும் ஒருவருக்கு 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும்.
அதற்கமைய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜதந்திரக் கடவுச்சீட்டை வைத்திருப்பதால் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் தெரிவித்தார்.
இதேவேளை, கோட்டாபய, வேறு நாட்டில் நிரந்தரப் புகலிடம் தேடுவதற்காகத் தாய்லாந்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்பார் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் – ஓ – சா கூறினார்.
“இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை. இது தற்காலிக தங்குமிடம் என்று நாங்கள் உறுதியளித்துள்ளோம். எந்த அரசியல் நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது. மேலும், இது அவருக்குத் தஞ்சம் புகுவதற்கு ஒரு நாட்டைக் கண்டறிய உதவும்” என்றும் தாய்லாந்து பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, தனது 90 நாள் தாய்லாந்து விசா முடிவடைந்தவுடன் நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேறு நாட்டில் தற்காலிக தங்குமிடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாததால் அவர் இலங்கை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்களை அகதிகள் ஆக்கியவர் தமிழருக்கு புகலிடம் கிடைத்து இவனுக்கு யாருமே இடம் கொடுக்கவில்லை
கொடுமை என்னவென்றல் அமெரிக்காவில் உள்ள மகனுடன் கூட சேர்ந்து வாழமுடியாத நிலை பாவம் ஆண்டவனின் தீர்ப்பு இதுபோன்ற மற்றவர்களுக்கும் ஏற்படும்(ராஜபக்ஷ சகோதரர்களுக்கும்)