தேசிய கொடி ஏற்றதா வீடுகளை கவனித்து எனக்கு புகைப்படம் அனுப்புங்கள்.. சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை விமரிசையாக கொண்டாட, மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதிவரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருந்தார். தனது முகப்புப் பக்கத்தையும் அவர் மாற்றினார்.
அதேபோல், ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, பாஜகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வீட்டில் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர். இந்நிலையில், வீட்டில் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஒரு பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட், மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுகிறார்களா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
அப்படி ஏற்றாதவர்கள் தேசிய உணர்வு கொண்டவர்களா என்ற ஐயம் மனதில் எழுகிறது. உண்மையான தேசப் பற்று கொண்டவர்கள் வீட்டில் தேசியக் கொடி ஏற்றுவார்கள். எனவே, தேசியக் கொடி ஏற்றாதவர்கள் யார் என கண்டறிந்து புகைப்படங்களை எனக்கு அனுப்புங்கள் என்றார்.
இவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து தனது பேச்சு குறித்து மகேந்திர பட் விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் பாஜக தொண்டர்கள் தான் தங்கள் வீட்டில் கட்டாயம் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் எனக் கூறியிருந்தேன். இதை வைத்து காங்கிரஸ் கட்சியினர் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள்.நாட்டின் மீது பற்று கொண்ட அனைவரும் பிரதமரின் அழைப்பை ஏற்று வீட்டில் கட்டாயம் தேசியக் கொடி ஏற்றுவார்கள் என நம்புகிறேன்” என்றார்.