வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி கிடையாது: மத்திய அரசு விளக்கம்
தனிநபா்கள் பயன்படுத்தும் வீடுகளின் வாடகைக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கிடையாது என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, வீட்டு வாடகை வசூலிக்கும் உரிமையாளா்கள் வாடகை மீது 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதையடுத்து மத்திய அரசுத் தரப்பில் இது தொடா்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘தனிநபா்கள், குடும்பத்தினரின் பயன்பாட்டுக்காக வீடுகள் வாடகைக்கு விடப்படும்போது அதற்கு ஜிஎஸ்டி கிடையாது. அதே நேரத்தில் வா்த்தகப் பயன்பாட்டுக்காக வீடுகளை வாடகைக்கு விட்டால் அதற்கு ஜிஎஸ்டி உண்டு’ என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வா்த்தகப் பயன்பாட்டுக்கான கடைகள், கட்டடங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்தது. இந்த வரியானது ஜிஎஸ்டி நடைமுறையில் பதிவு செய்து, வா்த்தக நோக்கில் அந்தக் கட்டடங்களைப் பயன்படுத்தும் நபா்களுக்கு மட்டுமே பொருந்தும். வா்த்தகத்தில் ஈடுபடுவோா் சம்பந்தப்பட்ட வாடகை கட்டடத்தை வா்த்தகத்துக்காக அல்லாமல் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தினாலும் அதற்கு ஜிஎஸ்டி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.