சாவதற்காகவே சுவிட்சர்லாந்தில் குடியேற விண்ணப்பித்த இந்தியர்! தடுத்து நிறுத்த நீதிமன்றத்தை நாடிய தோழி
சாகவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒருவர் சுவிட்சர்லாந்தில் குடியேற முடிவுசெய்துள்ளார்.
இந்தியாவில் கருணைக்கொலை செய்வது சட்டவிரோதமானது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்தியாவில் நொய்டாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கருணைக்கொலைக்காகவே சுவிட்சர்ந்தில் குடியேற முடிவு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அறிந்து கொண்ட அவரது தோழி ஒருவர், தனது நண்பருக்கு சுவிட்சர்லாந்து செல்வதற்கான குடியேற்ற அனுமதியை வழங்க வேண்டாம் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
49 வயதான மனுதாரரின் மனுவின்படி, நொய்டாவில் தனது 40 வயதுகளில் உள்ள அவரது நண்பர் Myalgic Encephalomyelitis அல்லது Chronic Fatigue Syndrome எனப்படும் சிக்கலான, வலுவிழக்கச் செய்யும், நீண்டகால நரம்பு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு தினம் தினம் அவதியை அனுபவித்துவருகிறார்.
2014-ல் அவருக்கு இந்த நோய் இருப்பது முதலில் தெரியவந்தது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது முற்றிலும் படுக்கையில் இருக்கிறார். அவரால் வீட்டுக்குள் சில அடிகள் மட்டுமே எடுத்துவைத்து நடக்க முடியும் என்ற சூழலில் உள்ளார்.
முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் “நன்கொடையாளர் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள்” காரணமாக கோவிட் தொற்றுநோய்களின் போது அதைத் தொடர முடியவில்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.
தனது நண்பருக்கு “இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கு நிதிக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆனால் அவர் இப்போது கருணைக்கொலைக்கு செல்லும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார், இது அவரது வயதான பெற்றோரின் வாழ்க்கையையும் மோசமாக பாதிக்கிறது. அவரது உடல்நிலை மேம்படுவதற்கான நம்பிக்கை இன்னும் இருக்கிறது” என்று வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கேஆர் மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பெறுவதாக பொய்யான சாக்குப்போக்கில் சுவிட்சர்லாந்திற்கு தேவையான விசா பெற்ற தனது நண்பரின் உடல்நிலையை பரிசோதிக்கவும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் மருத்துவ குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் மேலும் வேண்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளிடம் தவறான கோரிக்கைகளை முன்வைத்துள்ள தனது நண்பருக்கு குடியேற்ற அனுமதி வழங்க வேண்டாம் என்று நீதிமன்றம் வெளிவிவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் வேண்டிக் கொண்டார்.
மேலும், சுகாதார அமைச்சகம் ஒரு மருத்துவக் குழுவை அமைத்து, பாதிக்கப்பட்ட தனது நண்பரின் உடல்நிலையைப் பரிசோதிக்கவும், அவரது தனிப்பட்ட உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இல்லையெனில் தனது நண்பரின் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஈடுசெய்ய முடியாத இழப்பையும் கஷ்டத்தையும் சந்திப்பார்கள், இந்த கோரிக்கை பூர்த்திசெய்யப்படாவிட்டால் வேதனையான தருணத்தை அனுபவிப்பார்கள் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.