புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கக் காரணம் என்ன? – பாதுகாப்பு அமைச்சிடம் விமல் கேள்வி.
“புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை எதற்காக நீக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறியே இந்த அமைப்புக்கள் மீது தடை விதிக்கப்பட்டது. அதனால் தடை நீக்கப்பட்டமைக்கான தெளிவான விளக்கத்தைப் பாதுகாப்பு அமைச்சு கூற வேண்டும்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.
6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடை அரசால் நீக்கப்பட்டுள்ளது. அது தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை எதற்காக நீக்கப்பட்டது? தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணங்கள் இருந்தன அல்லவா?. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று கூறியே இந்த 6 அமைப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் தடை நீக்கப்பட்டமைக்கான தெளிவான விளக்கத்தைப் பாதுகாப்பு அமைச்சு கூற வேண்டும்.
இப்போது அந்தத் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் தணிந்துவிட்டதா? அப்படி இல்லாவிட்டால் தடை நீக்கப்பட்டமைக்கு உண்மையான காரணம் என்ன?. அதை அறிந்துகொள்வதற்கான உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு.
என்ன காரணத்துக்காக 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் முக்கிய தனிநபர்கள் மீதான தடை நீக்கப்பட்டது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். பாதுகாப்பு அமைச்சு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தடை செய்யப்பட்டிருந்த அமைப்புக்கள் தங்களது நோக்கங்களைக் கைவிட்டிருக்க வேண்டும் அல்லது அந்த அமைப்புக்களால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்பு இல்லாமல் போயிருக்க வேண்டும். இந்த இரண்டில் எது நடந்தது என்பதை அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது” – என்றார்.