நாட்டையே உலுக்கிய பில்கிஸ் பானோ வழக்கு: 11 குற்றவாளிகளையும் விடுவித்த குஜராத் அரசு – வலுக்கும் எதிர்ப்பு

பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2002- ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரங்களின் போது 21 வயதான பில்கிஸ் பானோ என்பவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் அப்போது 5 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார். இது மட்டுமல்லாமல் பில்கிஸ் பானோவின் 2 வயது குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், 2008 -ம் ஆண்டு மும்பையிலுள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு நீதிமன்றம், 11 குற்றவாளிகளுக்குப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்யக் கோரிய மனுவையும் மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதிசெய்திருந்தது.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த குற்றவாளிகளில் ஒருவர் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 432, 433-ன் கீழ் தண்டனையை ரத்துசெய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த குற்றவாளியின் தண்டனையை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு, குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அவரை விடுதலை செய்யலாம் என கருத்து தெரிவித்திருந்தது .

இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய பரீசிலிக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெறிமுறைகளை அனுப்பியிருந்தது. ஆனால் இதில் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுவிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தடையை மீறி குஜராத் அரசுபில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தினர் 7 பேரையும் கொன்ற 11 குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது. இது ஒரு புறம் இருக்க விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை அவர்களது உறவினர்கள் இனிப்புகள் கொடுத்து வரவேற்றது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

குஜராத் அரசின் நடவடிக்கை, முன் எப்போதும் இல்லாதது என கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, பாலியல் வன்கொடுமை, கடுமையான தண்டனை வழங்க வேண்டிய குற்றத்திற்கு கீழ்வரவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். 2002- ஆம் ஆண்டு குஜராத் வன்முறையின் போது அங்கு வந்த அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தர்மத்தின் ஆட்சி நடைபெற வேண்டும் என்ற வலியுறுத்தியதை பிரதமர் மோடி நினைவில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், ஓவைசி உள்ளிட்டோரும் குஜராத் அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.