2024இல் ‘மொட்டு’வின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்!
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் களமிறக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் குரல்கள் ஒலித்து வருகின்றன.
இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி மாநாட்டை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவைத் தொடர்ந்து கட்சியின் தலைவராகவும், நாமல் ராஜபக்சவை கட்சியின் தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பஸில் ராஜபக்சவுக்கும், கோட்டாபாய ராஜபக்சவுக்கும் இம்முறை எவ்விதமான பதவிகளும் வழங்கப்படமாட்டாது என்று கூறப்படுகின்றது.
மேலும், சர்வகட்சி அரசில் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளாமல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் நாமல் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
2030ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு நாமல் இவற்றையெல்லாம் செய்து வருகின்றார் என்றும் கூறப்படுகின்றது.
நாமல் ஏற்கனவே தனது ஜனாதிபதிக் கனவை நனவாக்க மற்றொரு மாபெரும் யுக்தியை மேற்கொண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.