நித்தியானந்தாவிற்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாராண்டு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கர்நாடகா, ராம்நகர் மாவட்டம் பிடதியில் நித்தியானந்தாவிற்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு, அந்த ஆசிரமத்தில் பெண் சீடர் ஒருவருக்கு நித்தியாந்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு ராம்நகர் 3-வது மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் நித்தியானந்தா கடந்த 2010ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமினில் வெளியே வந்தார்.
பின்னர் அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகிய நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து 2020ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நித்தியாநந்தாவை பல முறை ஆஜராக கூறியும் அவர் ஆஜராகாததால், அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடி வாரண்ட் பிறப்பித்தது. மேலும் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதற்கு முன்னர் பல்வேறு பாலியல் வழக்குகளில் நித்தியாநந்தாவை கைது செய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டும், அவர் தலைமறைவாக இருப்பதால் கைது செய்யப்படவில்லை. அவர் இந்தியாவில் தான் தலைமறைவாக உள்ளார் என சிலர் கூறி வரும் நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் நித்தியானந்தாவிற்கு உடல் நலக்குறைவு எனவும் அவர் கோமாவுக்கு சென்று விட்டார் என தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் மீண்டு வந்துவிட்டதாக வீடியே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.