விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம்… பரந்தூர் மக்களுக்கு கூடுதல் இழப்பீடு- அமைச்சர் தங்கம் தென்னரசு
பரந்தூர் விமான நிலையம் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்றும் நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை விலையை விட கூடுதல் இழப்பீடு தரப்படும் என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக பரந்தூர், ஏகநாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு உட்பட 12 கிராமங்களுக்குட்பட்ட நான்காயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. ஆனால், இதன் மூலம் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் முக்கிய நகரங்களை இணைப்பதிலும், உலக வளர்ச்சியுடன் இணைந்து செயல்படுவதிலும் புதிய விமான நிலையத்தின் பங்கு முக்கியமானது. பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, சமூக பொருளாதார காரணிகளை கருத்தில் கொண்டு தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும். பரந்தூர் சுற்றுப்புறத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்படும். நிலம் தரும் விவசாயிகளுக்கு சந்தை விலையை விட கூடுதலாக, திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும்.
புதிய விமான நிலையம் மூலம் சுற்றுவட்டார மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதுடன், அனைத்து பொருளாதார பலன்களையும் கிடைக்க பெறுவர்” என்று கூறியுள்ளார். கடந்த 17ஆம் தேதி விமான நிலையம் அமைப்பது தொடர்பாக 12 கிராம மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. கிராம மக்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேசுவதாக இருந்த நிலையில் நண்பகல் 12 மணிவரை அமைச்சர்கள் வராததால், 12 கிராம பொதுமக்களும் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி வெளியேறினர்.
அமைச்சர்கள் தாமதமாக வந்து பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், சுந்தர், செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 12 கிராம பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்றனர்.