தனியார் பால் விலை உயர்வு.. ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு
தனியார் பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டதையடுத்து ஆவின் பால் பாக்கெட்டின் தேவை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், அரசின் ஆவின் நிறுவனம், 38.26 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்கிறது. மீதமுள்ளவற்றை தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் இருந்து செயல்படும் தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. தமிழகத்தின் பால் தேவையில் 84 சதவீதம் அதாவது 1.25 கோடி லிட்டரை தனியார் பால் நிறுவனங்கள் பூர்த்தி செய்வது வருகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் 2வது வாரத்தில் தனியார் நிறுவனங்கள் பால் பாக்கெட்களின் விலையை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்த்தியது. நடப்பாண்டில் மூன்றாவது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட் விலை உயர்வால் ஆவின் பால் பாக்கெட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது, நாளொன்றுக்கு 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் கூடுதலாக விற்பனையாகி வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னையில் 14.2 லட்சம் லிட்டர் பால் தினசரி விற்பனையான நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 14.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இதேபோல், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகத்தில் தினசரி விற்பனை 29 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது 29.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் தினமும் விற்பனை ஆகிறது.
வீட்டு பயன்பாடு மட்டுமல்லாது, தேநீர் கடைகள், ஜூஸ் கடைகள் ஆகியவையும் ஆவின் பாலை வாங்க தொடங்கியுள்ளன. இதன் மூலம் தினமும் 1000 ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடிவதாக கடை உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.