சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அனுப்பி வைக்கும்படி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி கடந்த மே மாதம் 7-ம் தேதி அன்று “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை” விரிவுபடுத்துவது குறித்த அறிவிப்பினை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், சில தேவைகள் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தும், நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அதனை செயல்படுத்திட இயலாத நிலை இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அத்தியாவசியத் திட்டங்களை அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக் கூடிய வாய்ப்பை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உருவாக்கும் என்று கூறியுள்ளார்.
எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அதில் மிக முக்கியமான 10 திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்கலாம் என்றும் பட்டியலில் இருக்கக் கூடிய திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். குடிநீர், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள், சாலைகள், மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் அடங்கிய பட்டியலை மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த 15 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற தொகுதியில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத மக்களுடைய நீண்ட நாள் தேவைகள் இந்த முன்னோடி திட்டத்தின் கீழ் நிறைவேறும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ள முதலமைச்சர், மாவட்டங்களுக்கு இடையே உள்ள சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சீர்செய்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கு இத்திட்டம் பங்களிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.