மின் கட்டண உயர்வு.. கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுமக்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி கோரி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் மனு அளித்துள்ளது. மின் கட்டண உயர்வினால் வீட்டு வாடகை, கடை வாடகை, சிறுகுறு தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்டறியப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் வீரமணி, உறுப்பினர்கள் வெங்கடேசன், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகள், சிறுகுறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில், பெரும்பாலானோர் மின் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை, மதுரை, சென்னை போன்ற பெருநகரங்களில் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திய பிறகு, அதனடிப்படையில் கட்டண உயா்வுக்கான ஒப்புதலை மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும். இந்த ஒப்புதலின் அடிப்படையில், மின்சார வாரியம் பரிந்துரைத்த கட்டண விவரங்கள் அமலுக்கு வரும்.கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நிறைவடைவதால் செப்டம்பா் மாதத்திலிருந்து புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.