ஒரே நாடு ஒரே சார்ஜர் திட்டம் அறிமுகம்? – இத்திட்டத்தின் நோக்கம் என்ன?

இந்தியாவில் பயன்படுத்துப்படும் லேப்டாப், டேப்லெட், மொபைல் ஆகிய எலெக்ட்ரானிக் உபகரணங்கள் அனைத்திற்கும் ஒரே சார்ஜர் பயன்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

லேப்டாப், மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் என ஒவ்வொரு உபகரணத்திற்கும் தனித்தனி சார்ஜர் கொண்டு செல்பவரா நீங்கள்? இனி அதற்கு அவசியம் இல்லாமல் போக வாய்ப்புள்ளது.

எல்லா விதமான எலெக்ட்ரானிக் கருவிகளுக்கு ஒரே வகையான சார்ஜர் பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்க மத்திய அரசு நிபுணர் குழு ஒன்றை உருவாக்கவுள்ளது.

ஐரோப்பாவில் இதே போல் டைப்-சி கேபிளை, 2024ஆம் ஆண்டிற்குள் யுனிவர்சல் சார்ஜராக மாற்ற வேண்டும் என தீர்மானம் போடப்பட்டது. ஐரோப்பாவின் விதிப்படி இனி வாடிக்கையாளர்கள் புதிய மொபைல் வாங்கும் போது புதிய சார்ஜர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே பயன்படுத்திய சார்ஜரை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதனைதொடர்ந்து இந்தியாவும் இதற்காக குழு அமைக்கவுள்ளது. இது பெரும்பான்மையான மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், சில பிரச்னைகளும் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் ஐரோப்பா முழுமையாக இதை நடைமுறைப்படுத்தும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

அனைத்து போன்களிலும் டைப்-சி கட்டாயம் என்றால், குறைந்த விலையில் உள்ள மொபைல்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சார்ஜர் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருந்து வருகிறது, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே சார்ஜர் திட்டம் இந்தியாவின் ஏற்றுமதி செய்யும் திறனை கடுமையாக பாதிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய அரசு இதனை சுற்றுசூழல் சார்ந்த பிரச்னையாக கருதுகிறது. இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் 3,000 கிலோ டன் எலெக்ட்ரானிக் குப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் வெறும் 30 கிலோ டன் மட்டுமே முறையாக சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தால் எலெக்ட்ரானிக் குப்பைகளை குறைக்க மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.