குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் – விழிப்புணர்வு ஏற்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தக்காளி காய்ச்சல் பாதிப்புகள் குறித்து குழந்தைகள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படும் நோய், கேரளாவில் கடந்த மே மாதம் 6-ம் தேதி உறுதிசெய்யப்பட்டது. இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 82-க்கு மேற்பட்டகுழந்தைகளுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய சுகாதார அமைச்சகம், நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

மருந்துகள் இல்லாத நிலையில், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகளையே பெரும்பாலும் தாக்கும் என்பதால், இதன் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் குறித்து குழந்தைகள் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டலில், “ தக்காளி காயச்சல் வைரஸ் மற்ற வைரஸ் தொற்றுகள் போன்ற அறிகுறிகளைக் காட்டினாலும், கொரோனா, குரங்கம்மை, டெங்கு அல்லது சிக்கன் குனியாவுடன் தொடர்புடையது அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் அல்லது உடலில் சொறி அறிகுறிகள் உள்ள குழந்தைகளை கட்டிப்பிடிக்கவோ, தொடவோ வேண்டாம் என குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறி ஏற்பட்டவர்களை 5 முதல் 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பிவைத்தாலும் முடிவுகள் வருவதற்கு 2 முதல் நான்கு வாரங்கள் ஆகும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.