இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 151 ரன்னில் ஆல்-அவுட்.
இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி, முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்க வீரர்கள் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர்.
தொடக்க வீரர்கள் சாரெல் எர்வீ 3 ரன்னிலும், கேப்டன் டீன் எல்கர் 13 ரன்னிலும் வெளியேறினர். வேகப்பந்து வீச்சாளர்கள் இடைவிடாது கொடுத்த குடைச்சலில் விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்த தென்ஆப்பிரிக்கா தேனீர் இடைவேளைக்கு பிறகு முதல் இன்னிங்சில் 53.2 ஓவர்களில் 151 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ககிசோ ரபடா 36 ரன்களும், கீகன் பீட்டர்சன், கைல் வெரைன் தலா 21 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை ஆடியது. ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 9 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். ஜானி பேர்ஸ்டோ 38 ரன்னிலும், ஜாக் க்ராவ்லி 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.