உச்சநீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித்!
தலைமை நீதிபதியாக இருந்த என்.வி. ரமணா நேற்றோடு(26.08.2022) பணிக்காலம் முடிந்து ஓய்வுபெறும் நிலையில் 49 ஆவது தலைமை நீதிபதியாக இன்று 27.08.2022 உதய் உமேஷ் லலித் பதவியேற்றார்.
கடந்த ஆகஸ்ட் 10 அன்று இந்திய அரசியலமைப்பின் 124(2) பிரிவு மூலம், இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் முன்னிலையில் யு.யு.லலித் அவர்கள் 49 ஆவது தலைமை நீதிபதி பணிக்கான நியமன பத்திரத்தை பெற்றார். அதன் அடிப்படையில் இன்று அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மேலும் இவர் அனைத்து 2ஜி வழக்கு விசாரணையிலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞராக இருந்தார். ஆகஸ்ட் 13, 2014 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவரது பெயரை முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏற்கனவே மத்திய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில் இவர் தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் வருகின்ற நவம்பர் 8, 2022 அன்று 65 வயதில் ஓய்வு பெறுவதால் ஓய்வு பெறுவதற்கு முன் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.