ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை.
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) கோதாவில் குதிக்கின்றன. பரம போட்டியாளரான இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றாலே உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் குஷியாகி விடுவார்கள். வீரர்களும் உணர்வுபூர்வமாக, இனம்புரியாத பதற்றத்திற்குள்ளாகி விடுவார்கள். எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி 10 ஆண்டுக்கு மேலாகி விட்டது.
ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதனால் முன்பை விட இப்போது எதிர்பார்ப்பு இன்னும் எகிறி விட்டது. நடப்பு சாம்பியனான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்குகிறது. கடந்த ஆண்டு இதே மைதானத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை லீக் சுற்றில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் மோசமாக தோற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இதை விட அருமையான சந்தர்ப்பம் கிடைக்காது.
கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் லேகேஷ் ராகுல், முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். முக்கியமான இந்த ஆட்டத்தில் இவர்கள் சாதுர்யமாக விளையாட வேண்டியது அவசியமாகும். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும் கோலி ரன்மழை பொழிவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
இதே போல் மிடில் வரிசையில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் கைகொடுத்தால் வலுவான ஸ்கோரை எட்டலாம். தினேஷ் கார்த்திக்குக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான். ஒரு வேளை அவர் வாய்ப்பு பெற்றால், ரவீந்திர ஜடேஜா வெளியே உட்கார வேண்டி வரும். பந்து வீச்சில் காயத்தால் ஜஸ்பிரித் பும்ரா விலகிய நிலையில் புவனேஷ்வர்குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹலைத் தான் இந்திய அணி அதிகமாக நம்பி இருக்கிறது. பாகிஸ்தான் எப்படி?
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் இந்தியாவும், 5-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. மழையால் ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் சந்திப்பது இது 9-வது நிகழ்வாகும். இதில் 6-ல் இந்தியாவும், 2-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது. அதிலும் ‘பவுல்-அவுட்’ முறையில் இந்தியா வெற்றி கண்டது.