அரைவாசிப் பணியாளர்கள் வேலைக்கு ‘லாயக்கற்றோர்’ – அமைச்சர் மீண்டும் சீண்டல்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையம், இலங்கை மின்சார சபை என்பவற்றின் பணியாளர்களில் அரைவாசிப் பேர் திறமையற்றவர்கள் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“மின்சார சபையில் உள்ள 26 ஆயிரம் பணியாளர்களுக்குப் பதிலாக அதிலுள்ள அரைவாசிப் பணியாளர்களால் திறமையாகப் பணியாற்ற முடியும். இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், பெற்றோலிய சேமிப்பு முனையம் என்பவற்றில் பணிபுரியும் 4 ஆயிரத்து 200 பேருக்கு பதிலாக, அங்குள்ள 500 பணியாளர்களால் திறமையாகப் பணியாற்ற முடியும்.
திறமையற்ற பணியாளர்களால்தான் தொழிற்சங்கங்கள் வளர்கின்றன. இலங்கையில் உள்ள பெரும்பாலான அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது இன்றியமையாதது.
அரசியல் தீர்மானங்கள், அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் திறமையின்மையே அரச நிறுவனங்களின் வீழ்ச்சிக்குக் காரணம். அரசாங்க நிறுவனங்களில் செயல்திறன் அடிப்படையிலான சம்பள முறை கட்டாயம்” – என்றுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் அமைச்சர் முறைப்பாடு மேற்கொண்டிருந்தார். அத்துடன் கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மின்சாரசபைத் திருத்தச் சட்டத்தை அமைச்சர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.