நொய்டா கட்டடம் இடிப்பு.. ரூ.500 கோடி நஷ்டம்..! கட்டட ஓனர் புலம்பல்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட சூப்பர்டெக் நிறுவனத்தின், எமரால்ட் குடியிருப்பு சங்க இரட்டை கோபுரங்கள் நேற்று அருவி உள்வெடிப்பு முறையில் 10 நொடிகளுக்குள் முழுவதுமாக தகர்க்கப்பட்டது. இதன் மூலம் தங்கள் நிறுவனத்திற்கு ரூ.500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனத்தின் எமரால்ட் குடியிருப்பு சங்க இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டன. இவற்றில் ஏப்பெக்ஸ் என்ற கட்டிடத்தில் மொத்தம் 32 தளங்கள் உள்ளன. சியான் கோபுரத்தில் 29 கோபுரங்கள் உள்ளன.
2004ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டத்தின் படி, ஒரு கட்டடத்தில் 14 தளங்களும், மற்றொரு கட்டடத்தில் 9 தளங்களும், கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், 2012ம் ஆண்டு அந்த திட்டம் திருத்தப்பட்டு, 2 கட்டடங்களிலும் 40 தளங்கள் வரை கட்டுவதற்கு நொய்டா ஆணையம் அனுமதி அளித்தது.
இதுவிதிமீறல் எனக்கூறி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இரண்டு அடுக்குமாடி கட்டடங்களையும் இடிக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், கட்டடத்தை இடிக்க உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இதையடுத்து இந்த இரட்டை கோபுரங்களை நேற்று 3,700 கிலோ வெடிமருந்துகள் மூலம் 12 நொடிகளில் தகர்க்கப்பட்டது.
இந்த கட்டடம் தகர்க்கப்பட்டதால் தனது சூப்பர்டெக் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டதாக நிறுவனத்தின் தலைவர் ஆர்.கே.அரோரா கூறியுள்ளார்.
குடியிருப்பு இருந்த நிலம், அதன் கட்டுமான செலவு, அனுமதிக்காக செலுத்திய தொகை, வீட்டை வாங்கியவர்களுக்கு வட்டியுடன் திருப்பி தந்த தொகை என நிறுவனத்திற்கு ஏற்பட்ட மொத்த இழப்பு ரூ.500 கோடி எனவும், இந்த கட்டடம் இடிக்கப்பட்டு, அதன் குப்பைகளை அகற்ற ஆகும் செலவுக்காக நாங்கள் ரூ.17.5 கோடி தந்துள்ளோம் என்றார். மொத்தம் 8 லட்சம் சதுரடியில் 900க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட இந்த இரட்டை கோபுரங்களின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.700 கோடிக்கு மேல் என சூப்பர்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.