நரிமன் பாய்ன்ட்டில் இருந்து டெல்லிக்கு 12 மணி நேரத்தில் மக்களை கொண்டு செல்வதே எனது கனவு – நிதின் கட்கரி!
சமீபத்தில் அசோசியேஷன் ஆஃப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் (ACCE) ஏற்பாடு செய்திருந்த சிவில் இன்ஜினியர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கான தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் பேசிய மத்தியமைச்சர் நிதின் கட்கரி டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ்வே (Delhi-Mumbai Expressway) குறித்து பேசிய போது. இது தனது கனவுத் திட்டம் என்றும் குறிப்பிட்டார். ஆம், மும்பை நரிமன் பாயிண்டிலிருந்து டெல்லிக்கு வெறும் 12 மணி நேரத்தில் குடிமக்களை அழைத்து செல்ல வேண்டும் என்பது எனது கனவு. Delhi-Mumbai Expressway திட்டமானது தற்போது 70% நிறைவடைந்துள்ளது. இப்போது நரிமன் பாயின்ட்டை டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் ஹைவேயுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம். இதை public-private partnership முறையை பயன்படுத்தலாம் என்றும் கூறி உள்ளார்.
தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு 26 கிரீன் எக்ஸ்பிரஸ் ஹைவேஸ், ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான லாஜிஸ்டிக்ஸ் பார்க்ஸ், ஏர்போர்ட்ஸ் போன்ற பஸ்போர்ட்ஸ், ரோப்வேஸ், கேபிள் கார்ஸ் உருவாக்கி வருகிறது. அதே நேரத்தில் அரசிடம் இன்னும் பல புதுமையான யோசனைகள் உள்ளன. இதன் மூலம் நாட்டின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்த மிகப்பெரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார். இது தேசிய தலைநகரான டெல்லி மற்றும் நாட்டின் பொருளாதார தலைநகரான மும்பைக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும். தவிர இந்த விரைவுச் சாலை டெல்லி-பரிதாபாத்-சோஹ்னா பகுதி வழியாக டெல்லியில் உள்ள நகர்ப்புற மையங்களை இணைக்கும் என குறிப்பிட்டார்.
பிரதமரின் ‘புதிய இந்தியா’ திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் வே கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டது. டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் வே வரும் மார்ச் 2023-க்கு பிறகு பொதுமக்களுக்காக திறக்கப்படும் என தெரிகிறது. ஹரியானா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை டெல்லி -மும்பை எக்ஸ்பிரஸ் வே இணைக்கும். இந்த திட்டம் இந்திய அரசின் லட்சிய பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் முதல் கட்டமாக இருக்கும்.
டெல்லி – மும்பை எக்ஸ்பிரஸ் வே என்பது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் (MORTH) சமீபத்திய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும். சுமார் ரூ.98,000 கோடி செலவில் 1380 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் இந்த எக்ஸ்பிரஸ் வே இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் வேயாக இருக்கும். தவிர இத்திட்டம் ஜெய்ப்பூர், கிஷன்கர், அஜ்மீர், கோட்டா, சித்தோர்கர், உதய்பூர், போபால், உஜ்ஜைன், இந்தூர், அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத் போன்ற பொருளாதார மையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தி, லட்சக்கணக்கானவர்களுக்கு பொருளாதார செழிப்பை கொண்டுவரும்.
இதனிடையே டெல்லி மற்றும் மும்பை இடையே 2.5 லட்சம் கோடி செலவில் மின்சார நெடுஞ்சாலை (electric highway) அமைக்கவும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலைகளில் டிராலி பஸ்கள் மற்றும் டிராலி டிரக்ஸ்களை இயக்க முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிராலி பஸ்கள் என்பவை மேல்நிலை கம்பிகளால் இயக்கப்படும் எலெக்ட்ரிக் பேருந்துகள். எலெக்ட்ரிக் ஹைவே என்பது overhead power lines உட்பட அதில் பயணிக்கும் வாகனங்களுக்கு மின்சாரம் வழங்கும் சாலையாகும்.