“நீதி கிடைக்கும் வரை வீதியில் இறங்கிப் போராடுவோம்” – சபையில் கஜேந்திரன் எம்.பி. எச்சரிக்கை.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்கும் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் ஒரு நிலைமையை உருவாக்குவதற்கும் ஒரு சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் செயற்படுகின்றாரா?”
– இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேலும் கூறுகையில்,
“ஒட்டுமொத்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களையும் கொதித்தெழ வைக்கும் செயற்பாட்டில் அரசு ஈடுபட்டுள்ளது. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக பிரிவானது 1989ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டில் அது பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது.
30 ஆண்டுகளுக்கு மேலாக அது ஒரு பிரதேச செயலகமாகச் செயற்பட்டு வருகின்ற நிலையில் இன்று வரைக்கும் அந்தப் பிரதேச செயலகத்துக்குரிய கணக்காளர் நியமனம் இடம்பெறவில்லை.
அதற்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில் கடந்த வாரத்திலிருந்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் இணையத்தளத்தின் ‘பிரதேச செயலகம்’ என்ற பிரிவுக்குள் இருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் பெயர் நீக்கப்பட்டு கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தோடு உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாடு தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் திட்டமிட்ட வகையில் ஒரு பகைமையை வளர்க்கின்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகும்.
அமைச்சரவை தீர்மானத்தின் மூலமாக பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த நிலையில் யாருடைய அனுமதியோடு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் இணையத்தளத்தின் ‘பிரதேச செயலகம்’ என்ற பிரிவுக்குள்ளிருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் பெயர் ஏன் நீக்கப்பட்டது?
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பகைமையை வளர்ப்பதற்காக கடந்த காலங்களில் அரசு திட்டமிட்ட ரீதியில் சில செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் பிரதமராக இருந்தபோது உயிர்த்த தினத் தாக்குதலுக்குப் பின்னர் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய ஒரு வாக்குமூலத்திலே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்குவதற்காக முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற விடயத்தை வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.
அதேபோன்றதொரு செயற்பாடுதான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பின்னரும் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வியுள்ளது.
ரணில் ஜனதிபதியாக வந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரைச் சந்தித்துள்ளது. அப்போது தாம் இந்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் பேசியதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறுகின்றனர்.
அதற்குப் பின்னரும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுகின்றன என்றால் இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்கும் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் ஒரு நிலைமையை உருவாக்குவதற்கும் ஒரு சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் இவ்வாறு செயற்படுகின்றாரா?
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள் ளூராட்சி சபைகள் அமைச்சின் இணையத்தளத்தின் ‘பிரதேச செயலகம்’ என்ற பிரிவுக்குள் இருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் பெயர் நீக்கப்பட்டமை இனவாதச் செயற்பாடு.
அமைச்சுக்குப் பொறுப்பான பிரதமர் தினேஷ் குணவர்தனதான் இந்த நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்தாரா என அவரிடம் இங்கு கேட்கின்றேன்.
இது பிரதமராக நீங்கள் செய்யும் காரியமா? இங்கிருக்கும் நீதி அமைச்சரின் கவனத்துக்கும் இந்த விடயத்தை நான் கொண்டு வருகின்றேன்.
தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்தும் இந்த முயற்சி உடனடியாக நிறுத்தப்பட்டு உடனடியாக அமைச்சின் இணையத்தளத்தில் மீண்டும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உள்வாங்கப்பட வேண்டும்.
அதேபோன்று பதிவாளர் நாயகத்தால் காணிப்பதிவுகளை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்குரிய கணக்காளர் நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவற்றை உடனடியாகச் செய்யத் தவறினால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்தழுவிய ரீதியில் கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கு ஆதரவாக அந்த மக்களோடு இணைந்து நீதி கிடைக்கும் வரை வீதியில் இறங்கிப் போராடவுள்ளோம்” – என்றார்.