காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: வடக்கு, கிழக்கில் இன்று போராட்டம்!
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இன்று கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோரைத்தேடி தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் இடங்களில் இந்தப் போராட்டம் இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 9 மணிக்கு வடக்கு – கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனை முன்றலில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, யாழ். மாவட்டத்தில் நாவலர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர். அலுவலக முன்றலிலும் மற்றும் யாழ். நகரிலும் , கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலிலும், வவுனியாவில் வவு.குடியிருப்பு பிள்ளையார் கோயில் முன்றலிலும், மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர்ப்பகுதியிலும், அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் மணிக்கூட்டுக் கோபுரப் பகுதியிலும், திருகோணமலையில் திருமலை மாவட்ட செயலக முன்றலிலும் போராட்டங்கள் முன்னனெடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்களான கனடா, அமெரிக்கா, ஜேர்மன், லண்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.