பெண். ஊடகவியலாளரை இலக்கு வைத்த மாஸ்கோ குண்டு வெடிப்பு? : சண் தவராஜா
ரஸ்யத் தலைநகர் மாஸ்கோவில் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற கார்க் குண்டுத் தாக்குதலில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கொலையுண்ட 29 வயதான டார்யா டுகினா ஒரு ஊடகவியலாளர் மற்றும் கார்க் குண்டுவெடிப்பில் கொலையானவர் என்பதற்கும் அப்பால் ஒரு தத்துவவாதியாக, எழுத்தாளராக, அரசியல் திறனாய்வாளராக பெரிதும் அறியப்பட்ட அவரது தந்தையான அலெக்சான்டர் டுகின் என்பவரின் மகள் என்பதனாலும் அவரது கொலை பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. குடும்பத்தோடு சம்பந்தப்பட்ட பாரம்பரிய நிகழ்வொன்றில் தனது தந்தையாருடன் கலந்து கொண்டுவிட்டு, தந்தையாரின் காரிலேயே தனியாகப் பயணம் செய்த வேளையில் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
தேசியவாதியும், தற்போது உக்ரைனில் ரஸ்யா தொடுத்துள்ள போரின் தீவிர ஆதரவாளருமான டுகினாவின் கொலையின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக ரஸ்யா குற்றஞ் சாட்டியுள்ளது. எனினும், தங்களுக்கும் இந்தக் கொலைக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனக் கூறியுள்ள உக்ரைன் இது வெறும் பரப்புரை உத்தி என வர்ணித்துள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ரஸ்ய உள்நாட்டு உளவு அமைப்பான எவ்.எஸ்.பி., உக்ரைனின் நவீன நாசிச அமைப்பான அசோவ் படைப்பிரிவின் உறுப்பினரான நத்தாலியா வோக் என்பவரே இந்தக் கொலையைப் புரிந்ததாகத் தெரிவித்துள்ளது.
தனது 12 வயது மகளுடன் யூலை மாதத்தில் ரஸ்யாவுக்கு வருகை தந்த வோக், டுகினா வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்குப் பெற்று வசித்து வந்ததாகவும், சம்பவம் நடைபெற்ற அன்றிரவு டுகினா கலந்து கொண்ட பாரம்பரிய நிகழ்வில் ஒரு ஊடகவியலாளர் போன்று கலந்து கொண்டதாகவும், சம்பவம் நடந்த அன்றிரவே மகளையும் அழைத்துக் கொண்டு அயல் நாடான எஸ்தோனிய எல்லையைக் கடந்து சென்றதாகவும் தெரிவித்துள்ள எவ்.எஸ்.பி. அவரது நிழற்படத்தையும் வெளியிட்டுள்ளது. இது தவிர, அவரின் அசோவ் படைப் பிரிவு அடையாள அட்டையும் சமூக வலைத் தளங்களில் உலா வருவதை அவதானிக்கவும் முடிகின்றது.
மறுபுறம், குறித்த கார்க் குண்டு வெடிப்பு யாரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. டுகினாவைப் பொறுத்தவரை அவர் அதிக பிரபலம் இல்லாதவர். மறுபுறம், அவரது தந்தையாரான அலெக்சான்டர் டுகின் அகில உலக அளவில் மிகவும் பிரபலமானவர். ரஸ்ய அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டினின் செயற்பாடுகளின் பின்னணியில் இவரே உள்ளார் என மேற்குலகினால் கருதப்படும் இவரே கொலையாளியின் இலக்காக இருக்கலாம் என்கின்றனர் ஒரு சாரார். அது மாத்திரமன்றி, தீவிர தேசியவாதியான அவர் உக்ரைன் மீதான ரஸ்யப் படையெடுப்பை அதி தீவிரமாக ஆதரிப்பவராகவும் உள்ளார்.
சம்பவ தினத்தன்று தந்தையும் மகளும் ஒரே காரிலேயே பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். எனினும் இறுதி நேரத்தில் டுகின் தனது திட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளார் என்கின்றன செய்திகள்.
அயல் நாடான உக்ரைனில் ஒரு பெரும் போரில் ஈடுபட்டிருக்கும் ரஸ்யாவின் தலைநகரில் ஒரு கார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது ரஸ்யத் தரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதே நேரம், ரஸ்ய உளவு அமைப்பு சொல்வதைப் போன்று இது உக்ரைன் அரசாங்கத்தின் கைங்கரியமாக இருக்குமாயின் ரஸ்யாவுக்குப் பாரிய பின்னடைவாகக் கருதப்படக் கூடிய ஒன்று. வல்லரசான ரஸ்யாவின் தலைநகரில் ஒரு குண்டுத் தாக்குதலை நடத்தக்கூடிய வல்லமையை உக்ரைன் பெற்றிருப்பது அதிசயிக்கத்தக்கது.
உக்ரைன் போர் ஆரம்பமாகி 6 மாதங்களை எட்டியுள்ள நிலையில், தற்காப்புத் தாக்குதலை மாத்திரம் பெருமளவில் நடத்திக் கொண்டிருந்த உக்ரைன், பதில் தாக்குதலை நடத்த இருப்பதாக அண்மைக் காலங்களில் பல்வேறு தடவைகளில் செய்திகளை வெளியிட்டிருந்தமை தெரிந்ததே. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகிடம் இருந்து பெற்றுக்கொண்ட அதி தூர ஏவுகணைகளைக் கொண்டு பல்வேறு தாக்குதல்களை அண்மையில் நடத்தியிருந்த உக்ரைன், கிரிமியாவில் உள்ள இலக்குகள் மீதும் ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியிருந்தது. அதன் நீட்சியாக மாஸ்கோ தாக்குதல் நடைபெற்றிருக்குமானால் ரஸ்யாவில் இதுபோன்ற தாக்குதல்கள் தொடரும் என நம்பலாம்.
அதேவேளை, மாஸ்கோ தாக்குதல் நடைபெற்ற பாணி முன்னர் உலகின் பல பாகங்களிலும் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை நினைவுபடுத்துவதாக உள்ளதாக நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் மற்றும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. என்பவை இது போன்ற தாக்குதல்களை உலகின் பல பாகங்களிலும் நடத்தியுள்ளன. தொடர்ந்தும் நடாத்தியும் வருகின்றன. கிட்டத்தட்ட அதே பாணியிலேயே மாஸ்கோத் தாக்குதலும் நடைபெற்றிருப்பது இந்தத் தாக்குதலின் திட்டமிடலில் ஒரு மறைகரம் இருக்கலாம் என்பதைத் துல்லியமாகத் தெரிவிக்கின்றது. அந்த மறைகரம் யாராக இருக்கும் என்பதை ஊகிப்பதில் சிரமம் இருக்கப் போவதில்லை.
ஆனால், இந்தத் தாக்குதலின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை நோக்குவது அவசியம். ரஸ்யத் தரப்பில் அரசுத் தலைவர் விளாடிமிர் புட்டின், வெளியுறவு அமைச்சர் சேர்கை லவ்ரோவ் உள்ளிட்ட பலர் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் பல தரப்புகளில் இருந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
உக்ரைன் மீதான படை நடவடிக்கைகளில் ரஸ்யத் தரப்பு தொடர்ந்தும் ஒருவகை நிதானத்தைக் கடைப்பிடித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. அண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ரஸ்யப் பாதுகாப்பு அமைச்சர் சேர்கை சொய்கு, ரஸ்யப் படை நடவடிக்கைகள் மெதுவாகச் இடம்பெறுவதன் நோக்கத்தை விளக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். பொது மக்களின் சேதத்தைத் தவிர்க்கும் நோக்கிலேயே தமது படையினர் மிகவும் மெதுவான வேகத்தில் முன்னேறுவதாகக் கூறிய அவர் மேற்குலகு விரும்புவது போன்று தம்மால் செயற்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
எதிரியை நிதானம் இழக்கச் செய்தல் போரியல் உத்திகளுள் ஒன்று. அவ்வாறு நிதானம் இழக்கும் எதிரி செய்யும் தவறுகள் மற்றைய தரப்புக்குச் சாதகமான நிலையை உருவாக்கலாம். களத்தில் சாதகமான நிலை உருவாகாது விடினும், பரப்புரைத் தளத்தில் சாதகமான நிலை உருவாகக் கூடும்.
சில வேளைகளில் மாஸ்கோ தாக்குதல் இதுபோன்ற ரஸ்யாவை நிதானமிழக்கச் செய்யும் ஒருவகை உத்தியாகக் கூட இருக்கக் கூடும்.