காவிரியில் வெள்ளப் பெருக்கு.. கரையோர பகுதிகளை சூழந்த வெள்ளம்.. குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி
மேட்டூர் அணையில் இருந்து அண்மையில் கூடுதலான அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி,குப்பனூர், கூடக்கல், மோளப்பாறை மற்றும் அதனை ஒட்டி உள்ள காவிரி கரை பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன.
குறிப்பாக பூலாம்பட்டி அடுத்த காவிரிக்கதவணை நீர்த்தேக்க பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த அதிக அளவிலான வாழை, பருத்தி, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பெருமளவு நீரில் மூழ்கியுள்ளது.
இதேபோல் பூலாம்பட்டி அருகே உள்ள கரையோர குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது, எடப்பாடி அடுத்த நெடுங்குளம் பகுதியில் அமைந்துள்ள கூட்டு குடிநீர் நீர் உந்து நிலையம் முழுவதையும் வெள்ளநீர் சூழ்ந்ததால், அங்கு வழக்கமாக நடைபெற்று வந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து காவிரி கரை பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் பேரிடர் மீட்பு குழுவினர் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.