கருப்பை வாய் புற்றுநோய்க்கு உள்நாட்டு தடுப்பூசி இன்று அறிமுகம்
கருப்பை வாய் புற்றுநோய்க்கு உள்நாட்டில் முதல்முறையாக தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி வியாழக்கிழமை (செப். 1) அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதுதொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: கருப்பை வாய் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பாற்றலை அளிக்கும் ‘சொ்வாவேக்’ தடுப்பூசியை ‘சீரம் இந்தியா’ நிறுவனம் தயாரித்துள்ளது. இது, கருப்பை வாய் புற்றுநோய்க்கு முக்கியக் காரணியான ஹியூமன் பாப்பிலோமா தீநுண்மிக்கு எதிராக செயல்படும்.
இந்தியாவில் 15 முதல் 44 வயதுள்ள பெண்கள் மத்தியில் ஏற்படும் புற்றுநோய்களில் 2-ஆவது இடத்தில் கருப்பை வாய் புற்றுநோய் உள்ளது. இதற்கு முதல்முறையாக உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தில்லியில் வியாழக்கிழமை தடுப்பூசியை அறிமுகம் செய்யவுள்ளாா். சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதாா் பூனாவாலாவும் பங்கேற்கவுள்ளாா்.
முன்னதாக, மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் மேற்கண்ட தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகள் நிறைவு பெற்றன. இதையடுத்து, தடுப்பூசியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், சந்தைப்படுத்துதலுக்கான அங்கீகாரத்தை கோரி இந்திய தலைமை மருந்துகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், தடுப்பூசியை சந்தைப்படுத்துவதற்கான அங்கீகாரம் சீரம் இந்தியா நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.