ஜெயராஜ் படுகொலை வழக்கின் இரு சந்தேக நபர்களும் விடுவிப்பு (Video).
2008 ஆம் ஆண்டு நீர்கொழும்பு வெலிவேரிய பகுதியில் தற்கொலை குண்டு தாக்குதல் மூலம் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை உட்பட 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு 13 வருடங்களுக்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார இன்று (01) உத்தரவிட்டார்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான காங்கேசன்துறையை சேர்ந்த செல்வராஜா பிரபாகரன் மற்றும் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே ஆகிய மூவரும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2008 ஏப்ரல் 6, அன்று, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை உட்பட 16 பேரைக் கொலை செய்தமை உட்பட வெலிவேரிய மைதானத்திற்கு அருகில் தற்கொலை குண்டுதாரி மூலம் 84 பேரைக் கொல்ல சதி செய்ததாக அவர்கள் மீது 31 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இத்தீர்ப்பு குறித்து படுகொலையான ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளையின் மனைவியான முன்னாள் அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபிள்ளை கருத்து தெரிவிக்கையில்
சந்தேக நபர்கள் மூவரும் எவ்வித குற்றமும் அற்றவர்கள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். தற்கொலை குண்டுதாரியால் 14 பேர் மரணித்தனர். அந்த வழக்கை பரிசீலித்த நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. அதில் எமக்கு மகிழ்ச்சியும் இல்லை. வருத்தமும் இல்லை. எங்களுக்கான இழப்பும் , துன்பமும் நடந்து முடிந்துவிட்டது. எனது கணவர் இறந்ததால் என்னைப் போல , நாட்டுக்கும் பேரிழப்பானது. அந்த வேதனையையும் , இழப்பையும் எதிர்காலத்திலும் தாங்கிக் கொள்கிறோம் என்றார்.