மாறி வருகின்றது ரணிலின் நிலைப்பாடு! – கையெழுத்து தொடர்பில் சுமந்திரன் குற்றச்சாட்டு.
“இதுவரை காலமும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போது சிங்களத்தில் கையெழுத்திடுவதன் மூலம் அவரின் நிலைப்பாடுகளும் மாறி வருவது தெளிவாகின்றது” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மைய நாட்களாகத் துப்பாக்கிச்சூட்டு மரணங்கள் அதிகரித்துள்ளன. அந்த மரணங்களைத் தடுக்கவோ சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யவோ பொலிஸார் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால், மக்களின், மாணவர்களின் போராட்டங்களை அடக்கவே பொலிஸார் பயன்படுத்தப்படுகின்றனர். ஓர் இடத்தில் 500 பேர் ஆர்ப்பாட்டம் செய்தால் அங்கு ஆயிரம் பொலிஸார் நிற்கின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க வழக்கமாக ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுவார். ஆனால், அவர் ஜனாதிபதியானதன் பின்னர் மூன்று தடுப்புக் காவல் சட்ட ஆவணங்களிலும் சிங்களத்தில்தான் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அவரின் மன நிலை மாறி வருவதைக் காண முடிகின்றது” – என்றார்.