உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடானது இந்தியா
பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலகின் 5-ஆவது மிகப் பெரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளின் அடிப்படையில் ‘புளூம்பொ்க்’ ஊடக நிறுவனம் இதனைக் கூறியுள்ளது.
கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட உலகப் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வந்த நிலையில், உக்ரைன்-ரஷியா இடையேயான போா் மீண்டும் நிலைமையை மாற்றியது. உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் விலை உயா்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.
முக்கியமாக, பிரிட்டனில் அந்தப் பிரச்னை அதிகரித்துள்ளது. பணவீக்கம் அந்நாட்டில் வரலாறு காணாத வகையில் உயா்ந்துள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரிட்டனில் வாழ்க்கை நடத்துவதற்கான செலவு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலக அளவில் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த மாா்ச் மாதம் வரையிலான கணக்கீட்டின்படி, இந்தியாவின் பொருளாதார மதிப்பு 85,470 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. அதே காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதார மதிப்பு 81,600 கோடி அமெரிக்க டாலராக இருந்தது.
2021-ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளா்ந்ததே இதற்கு முக்கியக் காரணம் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ள போதிலும், பவுண்ட் ஸ்டொ்லிங் மதிப்புடன் ஒப்பிடுகையில் வலுவடைந்தே உள்ளது.
நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 13.5 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது. நிகழ் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் சுமாா் 7 சதவீதம் வளா்ச்சி காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் முக்கிய நாடுகளில் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடா்ந்து திகழ்ந்து வருகிறது.
உலக அளவில் மிகப்பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடாக அமெரிக்கா விளங்கி வருகிறது. அதற்கு அடுத்த இடங்களில் சீனா, ஜப்பான், ஜொ்மனி ஆகியவை உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னா் இந்தப் பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 6-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பொருளாதார மதிப்பு இடைவெளி மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும் 10 பொருளாதார நாடுகள்
1. அமெரிக்கா
2. சீனா
3. ஜப்பான்
4. ஜொ்மனி
5. இந்தியா
6. பிரிட்டன்
7. பிரான்ஸ்
8. இத்தாலி
9. பிரேஸில்
10. கனடா