உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் தொடங்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை
தென்னிந்திய மக்களின் நலனை கருத்தில்கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் தொடங்க வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள நீதிமன்றங்கள், ஒரே இடத்தில் செயல்படும் விதமாக, சார்பு நீதிமன்றங்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் கட்டும் பணி 315 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி கட்டடம் புதுப்பிக்கும் பணிகளை உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுலும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீதித்துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கூறினார். நீதித்துறையின் பரிந்துரையை ஏற்று, ஒரே இடத்தில் 9 அடுக்கு கட்டடத்தில் நீதிமன்றங்கள் செயல்பட உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை, தமிழ் வழக்காடு மொழி உள்ளிட்ட 3 கோரிக்கைகளையும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இதேபோல், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நியமனத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அனைவருக்கும் சம வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி பேசுகையில், சென்னை எப்போதும் எனக்கு 2-வது வீடு.
என் 2-வது வீட்டு விழாவுக்கு என்னை அழைத்ததில் மகிழ்ச்சி.
புதிய கட்டடம் கட்டப்படுவதும், பழையது புதுப்பிக்கப்படுவதும் பெருமைமிக்க தருணம். நீதியின் தரத்தை, நீதித்துறையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்வோம்.
எதற்காக தோற்றுவிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சென்னை உயர்நீதிமன்றம் நிறைவேற்றும் என்று நம்புகிறேன் என்றார்.
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பேசுகையில், ‘நான் பல நீதிமன்றத்தில் பணியாற்றி உள்ளேன். ஆனால் நாட்டிலேயே சென்னை உயர்நீதிமன்றம் தான் மிகவும் அழகான நீதிமன்றம்’ என குறிப்பிட்டார்.