நாமும் இறந்து போகும்முன் எமக்கான நீதி வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம் அறிக்கை

எதிர்வரும் 2020.08.30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு  காலை 10.00 மணியளில் வடமாகாணம் தழுவிய ரீதியில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திலும், கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில்  மாபெரும் கவனயீர்ப்புக் கண்டன பேரணியினை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“அன்பான உறவுகளே, வருகின்ற 2020.08.30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். எமது உறவுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்டன. உயிருடனேயே கையளிக்கப்பட்ட, கடத்தப்பட்ட, கூட்டிச் செல்லப்பட்ட, கைது செய்யப்பட்ட எமது உறவுகளின் நிலைமையை அறிவதற்கும், அதற்கான நீதியைக் கேட்டும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளாகிய நாம் 2017.02.20 இலிருந்து தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்களை கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நடத்தி வருகின்றோம்.

எமக்கான நீதியை நல்லாட்சி என்று கொண்டு வரப்பட்ட மைத்திரியின் அரசு வழங்கும் என்று சர்வதேசம் கண்மூடித்தனமாக நம்பியதால் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றவென கால நீடிப்புகளை வழங்கி இழுத்தடித்ததில் எம்முடன் போராடிய 72 உறவுகளை இழந்துவிட்டோம். தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் 30/1 தீர்மானத்துக்கு வழங்கிய அனுசரணையில் இருந்து விலகி தமிழர்களுக்கு நீதி வழங்கப் போவதில்லை என்பதைக் காட்டிவிட்டது.

இந்நிலையில் எமக்கான நீதியைப் பெறுவதற்கு சர்வதேசம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்பதை மக்களாகிய நீங்கள் உறுதிபடத் தெரிவிக்க வேண்டிய தேவையுள்ளது. எம்முடைய உறவுகள் ‘ஒருநாளாவது விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்திருந்தால் சரணடையுங்கள் புனர்வாழ்வளித்து விடுதலை செய்கின்றோம்’ என்று சிங்கள அரசு கூறியதை ஏற்று சரணடைந்ததால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள். உங்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக தங்களது இளமைக் காலத்தை அர்ப்பணித்தவர்களின் உறவுகளாகிய நாம் எமது பிள்ளைகளின் உயிருக்காகப் போராடி எமது உயிரையே விட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எனவே எமக்கு நீதி கிடைப்பதற்காக சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான வருகின்ற ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் பேரணியிலும் கலந்து கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமையாதலால் அனைத்துப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசார ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், மதகுருமார்கள், பொது அமைப்புகள், சட்டத்தரணிகள், வர்த்தகர்கள், வர்த்தக ஊழியர்கள், ஆட்டோ சாரதிகள், தனியார் போக்குவரத்தப் பணியாளர்கள், விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், அனைத்துத் தொழிற்சங்க அங்கத்தவர்கள், பொதுமக்கள், தேசியத்தை அவாவும் அனைத்துக் கட்சிகளும், அவர்களுக்கு வாக்களித்த பெருமக்களும் எமக்கு ஆதரவு தந்து எமது போராட்டத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம்.

உங்கள் ஆதரவுடன் நாம் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லுமாறு ஐ.நாவைக் கோருவதன் மூலமாக எமது உறவுகளுக்கான நீதியை பெறவேண்டும். நாமும் இறந்து போகும்முன் எமக்கான நீதி வேண்டும் இதுவே எமது கடைசி ஆசை” என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.