தலித் பேராசிரியர்கள் மீது வன்மம்.. பதவி உயர்வின் போது நடக்கும் ட்ராமா.. தலித் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு
பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தலித் பேராசிரியர்களின் பதவி உயர்வின் போது அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து அவதூறு பரப்பும் நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தலித் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கடந்த மே மாதம், திருச்சி உள்ள கல்லூரியில் பணியாற்றும் ஆங்கில பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்து முதலமைச்சர் புகார் பிரிவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இது தொடர்பான விசாரணை மேற்கொண்டதில், அவர் மீது குற்றம் உள்ளது என கூறப்பட்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் சமூக வலைதளங்களில் அந்த பேராசிரியர் மீது தொடர்ந்து அவதூறுகளும் பல்வேறு செய்திகளும் பரவி வருகிறது. இதன் உண்மை தன்மையை கண்டறியும் வகையில் தலித் கூட்டமைப்பின் சார்பில் பேராசிரியர் லட்சுமணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பேராசிரியர் லட்சுமணன், இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் விசாரணையின் அறிக்கை தொடர்பாக பேட்டி அளித்தார். அதில், “சமூக வலைதளங்களில் பெரியாரின் பெயர் தாங்கிய ஒரு கல்லூரியில் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில், இது போன்ற ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாகா கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.” என தெரிவித்தார்.மேலும், “இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவதால், இதன் பின்னணியில் குழு அரசியல், சாதி அரசியல் உள்ளதா என்பதை அறிவதற்காக ஆய்வு மேற்கொண்டோம்” என்றார்.
”தமிழ்நாட்டில் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் எதிரான ஒரு pattern உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னையில் ஒரு கல்லூரியில் நடைபெற்று, அது உண்மை இல்லை என நிரூபித்திருக்கிறோம்.தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளில் இதுபோன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கிறது, தலித் மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மீது இதுபோன்ற பாலியல் குற்றத்தை அவர்கள் பதவி உயர்வு வரும் போது அல்லது அடுத்த நிலைக்குச் செல்லும் பொது திட்டமிட்டு குற்றம்சாட்டப்படுவதாக கேட்டு கொண்டிருக்கிறோம்.
இது போன்ற நிகழ்வு இங்கும் நடைபெற்று இருப்பதற்கான முகாந்தரத்தை கண்டறிந்துள்ளோம். புகார் கொடுக்கப்பட்ட பேராசிரியர் மீது தவறு இருந்தால் விசாகா கமிட்டியின்படி நடவடிக்கை எடுக்கட்டும். சில சமூகத்தின் அமைதியை குழைக்கும் வகையில், ஜாதிய வன்மம் கொண்ட சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புகின்றனர். இதன் மூலமாக பேராசிரியரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.” என தெரிவித்தார்.