ஐ.எம்.எப்புடனான ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பிக்க வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கோரிக்கை.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைச் சபையில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சபாநாயகர் உள்ளிட்ட அரச தரப்பினரிடம் கோரிக்கை விடுத்தார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தற்போதைய ஜனாதிபதி எதிரணி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படும் காலத்தில் அதாவது இவ்வருடம் மார்ச் 23ஆம் திகதி அன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலும், அதேபோன்று ஏப்ரல் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின்போதும் சர்வதேச நாணய நிதியத்தின் 4ஆம் நிபந்தனையைச் சபையில் சமர்ப்பிக்குமாறு கோரினார்.
இந்தக் கருத்தை மையப்படுத்திக்கொண்டு ஒரு விடயத்தைக் கூற விரும்புகின்றேன். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட பணிக்குழாம் நிலை ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பிக்குமாறு கோருகின்றோம்.
இந்த ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இதனை வெளிப்படுத்துவதன் மூலம் எமக்கும் நாட்டு மக்களும் என்ன நடக்கின்றது என்ற ஒரு புரிந்துணர்வை அடைந்துகொள்ள முடியும்.
எனவே, நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட பணிக்குழாம் நிலை ஒப்பந்தத்தை நாளையாவது சபைக்குத் தெரியப்படுத்தவும். அதனைக் ஹன்சாட்டில் வெளியிடவும்.
அதன் பின்பு அதனைப் பரிசீலனை செய்வதற்கு எம்மால் முடியும்” – என்றார்.
இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த, “எதிர்க்கட்சித் தலைவர் கோரிய விடயத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்” – என்றார்.