கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம்.

சட்டவிரோத மது உற்பத்தியை தடுக்க முயன்ற இளைஞரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று பகல் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று சேர்ந்த போராட்டக்காரர்கள் அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இதன்போது கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்தார்.

இதேவேளை போதைப்பொருள் விற்பனை மற்றும் உற்பத்தியினால் அப்பகுதியில் உள்ள குடும்பங்கள் மற்றும் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றமை தொடர்பில் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்த முற்பட்ட இளைஞர்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்பிலும், அண்மையில் ஒரு இளைஞன் தாக்கப்பட்டமை தொடர்பிலும் இதன்போது பிரதேச செயலாளரின் கவனத்திற்கு மக்கள் கொண்டு சென்றனர்.

மேலும் தமது பிரதேசத்தில் காணப்படும் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு உதவுமாறும் மக்கள் மகஜர் ஒன்றின் ஊடாகவும் கோரிக்கை வைத்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் கருத்து தெரிவிக்கையில்,

போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு சிரமங்களை எதிர் கொண்டுவரும் நிலையில் கிராம மட்டத்தில் மக்கள் விழிப்படைந்து ஒன்று திரண்டு நிற்பது மகிழ்வினை தருவதாகவும் அதன் மூலம் சமுதாயத்தில் காணப்படும் போதைப்பொருளை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இவ்வாறான நிலையில் குறித்த பிரதேசத்தில் காணப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான தம்மாலான முயற்சியை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்

தொடர்ந்து குறித்த போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்ட பேரணியாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றனர் அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்ததுடன், போதைப்பொருள் பாவனையால் பிரதேசத்தில் காணப்படும் சமூக, பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இவ்வேளை தமது பிரதேசத்தையும், வருங்கால சந்ததியின் எதிர்காலத்தையும் பாதுகாத்து தருமாறு அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அராங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்பிலிருந்து மீள்வது தொடர்பில் மக்கள் விழிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் பொலிசார் ஊடாக நடவடிக்கை எடுக்கவும், மக்களிற்கு ஒத்துழைப்பு வழங்கவும் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் வீட்டில் உள்ள வாழ்வாதார பொருட்கள், பாத்திரங்கள், உடைகள் அனைத்தையும் கொண்டு சென்று விற்று மது அருந்துகின்றார்கள். இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக கிளிநொச்சி வட்டக்கச்சி இளைஞர்கள் தாமாக முன்வந்து போதைப் போருள் விற்பனை மற்றும் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக களமிறங்கியிருந்தனர். அவர்களால் கடந்த 23ம் திகதி 10 வீட்டுத்திட்டம் பகுதியில் பெருந்தொகை கசிப்பு உற்பத்தி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் குறித்த சமூக பணியில் களமிறங்கிய இளைஞன் ஒருவன் வாள் வெட்டுக்கு இலக்கானதை அடுத்தே குறித்த போராட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.