நீட் தற்கொலையை தடுத்த பேஸ்புக்.. தொழில்நுட்பத்திற்கு குவியும் பாராட்டு
பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் உதவியால் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்கொலை ஒன்று தடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் ஆங்காங்கு தற்கொலை செய்யும் வருந்தத்தக்க நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
அவ்வாறு உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர் நீட் தேர்வில் தோல்வி அடைந்தது அதன் காரணமாக கடுமையான விரக்தியில் இருந்துள்ளார். தேர்வில் தோல்வி அடைந்த மன வருத்தத்தை அவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர் விஷம் குடித்து தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். ஆனால் நல்வாய்ப்பாக தொழில்நுட்பம் அவரின் உயிரை காத்துள்ளது. பேஸ்புக்கில் உள்ள ரியல் டைம் தொழில்நுட்பம் அவரின் தற்கொலை பதிவை கண்டறிந்து உத்தரப் பிரதேச காவல்துறைக்கு இது தொடர்பாக எச்சரிக்கை(SOS alert) தெரிவித்துள்ளது. இந்த தகவல் லக்னோ காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றவுடன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார், அப்பகுதி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்ற காவல்துறை அவரை மீட்டு உயிரை காத்துள்ளனர்.
அத்துடன் இது போன்ற எண்ணம் ஏற்பட்டால் அந்த மனநிலையில் இருந்து வெளிவர உதவி எண்ணை காவல்துறை அவருக்கு வழங்கியுள்ளது. தற்கொலை தொடர்பான பதிவுகள் பேஸ்புக்கில் வந்தால் அது தொடர்பான அலெர்ட் வழங்கும் ஏற்பாட்டை அந்நிறுவனத்துடன் உத்தரப் பிரதேச காவல்துறை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தற்கொலை உயிரிழப்புகள் குறைக்கப்படுவதாக பலரும் காவல்துறையை பாராட்டி வருகின்றனர்.