கழுத்து நெரிக்கப்பட்டு கைதான லஹிருக்கு பிணை.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நேற்று (09) கைது செய்யப்பட்ட போராட்ட செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவிற்கு இன்று (10) பிணை வழங்கப்பட்டுள்ளது.
2 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட “வெனசக தருணிய” அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகரவ இன்று (10) காலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (09) பிற்பகல் காலி முகத்திடலில் செயற்பாட்டாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
லஹிரு வீரசேகர கொள்ளுப்பிட்டியில் வைத்து மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஆகஸ்ட் 30ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இது இருந்தது.
எவ்வாறாயினும், லஹிரு வீரசேகரவின் கழுத்து நெரிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.