புலனாய்வு தகவல் கிடைத்தும் மே 09 கலவரத்தை தடுக்கவில்லை : குழு அறிக்கை
மே 09ஆம் திகதி நாடு முழுவதும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கத் தவறியமை பொலிஸ் மற்றும் ஆயுதப்படையினரின் பாரிய குறைபாடு என தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இது தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் ஆஃப் த ஃப்ளீட் வசந்த கர்ணகொட, முன்னாள் விமானப்படைத் தளபதி, மார்ஷல் ஆஃப் எயார் ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
மார்ச் 31ஆம் திகதி மிரிஹானையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு தாக்கப்பட்டமை மற்றும் மே 09ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் போதிய தகவல்களை வழங்கியிருந்த போதிலும் பொலிஸாரும் ஆயுதப்படையினரும் உரிய முறையில் செயற்படவில்லை என குழு தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துமாறு உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், அந்த அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கவில்லை.
பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் சாட்சியங்களின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் 03 முக்கிய குறைபாடுகள் குறித்து குழு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
தடியடி, வானத்தை நோக்கி சுடுதல், முழங்காலுக்குக் கீழே சுடுதல், உளவு அமைப்புகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை, பாதுகாப்பு நிறுவனங்களுக்கிடையேயான செயல்பாட்டு ஒருங்கிணைப்பு இல்லாமை போன்ற உத்தரவுகளை நிறைவேற்ற பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் தயக்கம் காட்டியது ஆகியன மிகவும் தீவிரமான குறைபாடுகள் என குழு மேலும் தெரிவித்துள்ளது.
ரத்துபஸ் சம்பவம் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வழக்குத் தொடுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை போன்ற சர்வதேச அமைப்புகளின் முன்னிலையில் இலங்கையில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் உள்நாட்டு மோதல்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க படையினர் தயங்குகின்றனர் என அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.