வல்லையில் இழுவைப் படகு மீன்பிடி விவகாரத்தை தீர்க்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

வடமாராட்சி, வல்வெட்டித்துறை பிரதேச கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தக் தகுந்த சேற்றுப் படுக்கைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் குறித்த ஆய்வு நடவடிக்கைகளை இன்று(26.08.2020) ஆரம்பித்துள்ளனர்.

குறித்த ஆய்வுப் பணிகள் நிறைவடைந்து றோலர் எனப்படும் இழுவைப் படகுகளை பயன்படுத்தக் கூடிய கடற் பிரதேசங்கள் அடையாளப்படுத்தப்பட்டதும், இதுவரை வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் மத்தியில் நிலவிய இழுவைப் படகு தொழில் தொடர்பான முரண்பாடுகள் முற்றுப் பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வல்வெட்டித் துறை பிரதேச கடற்றொழிலாளர்களில் ஒரு பகுதியினர் 1978 ௲ 1989 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஆண்டு முழுவதும் இரவு நேரத்திலும் பின்னர் 1990 ௲ 2011 வரையான காலப் பகுதியில் பகல் நேரத்திலும் இழுவைப் படகு மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர்.

இருப்பினும் 2011 ஆண்டில் இருந்து, ஆவணி – பெப்பரவரி வரையான காலப் பகுதியில் காலை 6 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மாத்திரமே குறித்த தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், இழுவைப் படகு மீன்பிடி முறையினால் கடல் வளம் பாதிக்கப்பட்டுவதாக கண்டறியப்பட்டதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இழுவைப் படகு தடைச் சட்டத்தின் அடிப்படையில், அடையாளப்படுத்தப்பட்ட சேற்று படுக்கைகள் நிறைந்த பிரதேசத்தில் மாத்திரமே இழுவைப் படகுகள் பயன்படுத்தப்பட முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

எனினும், வல்வெட்டித் துறையில் இழுவைப் படகுகள் பயன்படுத்தக் கூடிய சேற்றுப் படுக்கைள் அடையாளப்படுத்தப்படாத நிலையில், குறித்த பிரதேசத்தில் தற்போது சுமார் 40 இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி சுமார் 160 இற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையைப் பயன்படுத்துவதனால் தமது கடல் வளம் பாதிகக்கப்படுவதாக குறித்த பிரதேசத்தை சேர்ந்த ஏனைய கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலாளர் சங்கங்களும் குற்றஞ்சாட்டி வருவதுடன் எதிர்ப்பும் வெளியிட்டு வருகின்றன. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகளும் தோன்றியுள்ளன.

இதனையடுத்து குறித்த விவகாரம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை(23.08.2020) சம்மந்தப்பட்ட தரப்பினரை அழைத்துக் கலந்துரையாடிய அமைச்சர், சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தொழில் முறையாக இருக்கும் இழுவைப் படகு மீன்பிடியை உடனடியாக நிறுத்துமாறும் குறுகிய காலப் பகுதிக்குள் நாரா நிறுவனத்தின் ஊடாக இழுவைப் படகு பயன்படுத்தக் கூடிய பிரதேசத்தினை அடையாளப்படுத்தி தருவதாகவும் உறுதி அளித்திருந்தார்.

அதனடிப்படையில் இன்று நாரா எனப்படும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் ஆய்வு பணிகள் நிறைவடைந்து இழுவைப் படகுகள் பயன்படுத்தக் கூடிய பிரதேசங்களை அடையாளப்படுத்தக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கக்ப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.