டிராபிக்கில் சிக்கிய கார்… 3 கிமீ ஓடிச் சென்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு குவியும் பாராட்டு
பெங்களூருவில் டிராபிக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவர், காரில் இருந்து கீழே இறங்கி ஓடி மருத்துவமனைக்குச் சென்று ஆபரேஷன் செய்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குடல் அறுவை சிகிக்சை மருத்துவர் கோவிந்த் நந்தகுமார். இவர் சர்ஜாபூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி ஒரு நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய அப்பாயின்ட்மென்ட் கொடுத்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த இரு வாரங்களாக பெங்களூருவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நீர் தேங்கி அங்கு டிராபிக் கடுமையாக இருந்து. சம்பவ தினமான ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்றும் காலை மருத்துவர் வீட்டில் இருந்து காரில் கிளம்பி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால், டிராபிக் காரணமாக அவர் மருத்துவமனைக்குச் செல்ல தாமதம் ஆகியுள்ளது. அறுவை சிகிச்சைக்கான நேரம் நெருங்கிய நிலையில், டிராபிக் சரியாவதாக தெரியவில்லை. எனவே, சற்றும் யோசிக்காமல் காரில் இருந்து இறங்கி மருத்துவமனையை நோக்கி ஓட ஆரம்பித்துள்ளார். சுமார் 3 கிமீ தூரம் மருத்துவமனைக்கு ஓடிச் சென்று மருத்துவமனையை அடைந்துள்ளார். பின்னர் குறித்து நேரத்தில் அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார்.
மருத்துவர் கோவிந்த் நந்தகுமாரின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தனது செயல் குறித்து மருத்துவர் கூறுகையில், நேரம் ஆக ஆக டிராபிக் சரியாகும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. எனவே, நேரத்தை வீணடிக்க வேண்டாம். நோயாளியை நீண்ட நேரம் காக்க வைப்பது நியாயமற்றது என நினைத்தேன்.
எனவே, டிரைவரிடம் காரை ஒப்படைத்துவிட்டு, மூன்று கிமீ ஓடி மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டேன்.. நான் தொடர்ந்து ஜிம் செல்பவன் என்பதால் இது எனக்கு எளிதாகவே இருந்தது என்றுள்ளார். மருத்துவரின் இந்த செயலுக்கு பாராட்டு குவியும் நேரத்தில், பெங்களூரு டிராபிக்குக்கு நீண்ட கால நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.