கோவா அரசியலில் திருப்பம்… பா.ஜ.கவில் இணைந்த 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2014-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து பா.ஜ.க தொடர் வெற்றியைப் பார்த்துவருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவருகிறது. அதேபோல, காங்கிரஸும் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. பல மாநிலங்களிலுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முக்கியத் தலைவர்கள் பா.ஜ.கவுக்கு செல்வது தொடர் கதையாக இருந்துவருகிறது.
காங்கிரஸ் கட்சியை மக்களிடையே வலுப்படுத்தும் விதமாக ராகுல் காந்தி, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு நடைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இந்தநிலையில், கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். 40 எம்.எல்.ஏக்களைக் கொண்ட கோவாவில் காங்கிரஸுக்கு 11 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அதில், தற்போது 8 பேர் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். அதனால், காங்கிரஸுன் பலம் 3 ஆக குறைந்துள்ளது.
மூன்றில் இரண்டு பங்கைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் கட்சி மாறியுள்ளதால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. திகம்பர் காமத், மைக்கல் லோபா தலைமையில் எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். இதுகுறித்து தெரிவித்த காமத், ‘நாங்கள் காங்கிரஸில் மகிழ்ச்சியாக இல்லை. குலாம் நபி ஆசாத்துக்கு என்ன நடந்தது என்று நாங்கள் பார்த்தோம். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பிரமோத் சாவன்த்துடன் இணைந்து பணியாற்றவுள்ளோம்’ என்று தெரிவித்தார்.