மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!..
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டில் மாற்றி அமைக்கப்பட்ட மின் கட்டணம் உயர்வு கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.
2026-27 ஆம் ஆண்டு வரை புதிய கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அந்த அறிவிப்பில் மின் கட்டணத்தையோ, பேருந்து கட்டணத்தையோ, பால் விலையையோ, உயர்த்தமாட்டோம் என்று சொல்லி ஆட்சியில் அமர்ந்தவர்கள், வாக்குறுதிகளை காற்றில் எழுதியதாக, உண்மைகளை தண்ணீரில் எழுதியதாகக் கருதி, தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி, ஏற்கனவே மிகப் பெரிய துன்பத்தில் உழன்று கொண்டிருக்கும் தமிழக மக்களை, அவர்களுடைய தலையில் ஆயிரம் செந்தேள்கள் கொட்டியதைப் போல, கடுமையான துயரத்தையும், வலியையும் ஏற்படுத்துகின்ற விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதையும் சொல்லி, மின் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் என அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், இன்று காலை 10.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.